பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

நாடக மேடை நினைவுகள்


என்பவரே. இவருக்குச் சங்கீதத்தில் மற்றும் சிலரைப்போல அவ்வளவு பாண்டித்ய மில்லாவிட்டாலும், இவ்வாறு ஒழுங்காய்ப் பாடியதனால் இவர் சங்கீதமானது சபையோரால் மிகவும் சிலாகிக்கப்பட்டது.

இந்த 1896ஆம் வருஷம் எங்கள் சபையார் முதல் முதல் ஆங்கிலத்திலும் நாடகமாட ஆரம்பித்தனர். இவ்வருஷம் மே 2ஆம் தேதி உலகெங்கும் பெயர்பெற்ற ஷேக்ஸ்பியர் மஹாநாடகக் கவி எழுதிய “ஜூலியஸ் சீசர் “ (Julius Caeser) என்னும் நாடகத்தில் சில காட்சிகளும், “ஜெயசந்திரா'” என்னும் ஒரு சிறு தெலுங்கு நாடகமும், “லீலாவதி சுலோசனா” நாடகத்தில் சில காட்சிகளும் ஒன்றாய் நடித்தோம். “ஜூலியஸ் சீசர்” என்னும் நாடகத்தில், மற்றவர்களெல்லாம் தங்களால் முடியாது என்று மறுத்தபடியால், நான் கதாநாயகனான புரூடஸ் (Brutus) என்பவரின் மனைவியாகிய போர்ஷியா (Portia) வேஷம் பூண்டேன். இதுதான் ஆங்கிலத்தில் முதன் முறை ஸ்திரீவேஷம் தரித்தது; இதுவே கடைசி முறையுமாகும். நான் ஸ்திரீவேஷம் தரிக்கவேண்டுமென்று இச்சை கொண்டு இதைத் தரித்தவனன்று; வேறொருவரும் அப்பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முடியாதென்று கைவிட்டபடியால் நான் இதைப் பூணும்படி நேர்ந்தது. அன்றியும் அச்சமயம் எனக்கு ஒருவித இருமல் வியாதியிருந்தது. அதற்காக என் மார்பெல்லாம் அக்னிப் பிளாஸ்திரியிட்டுக் கொப்பளித் திருந்தது; அதன் பேரில் பஞ்சை வைத்துக்கட்டி, என் ஆடையைப் பூணவேண்டியவனாயிருந்தேன். இந்தச் சங்கடத்துடன் நடித்தது எனக்குத் திருப்திகரமாயில்லை ; எனது நண்பர்கள் நான் நடித்தது நன்றாயிருந்ததெனக் கூறிய போதிலும், அதை முகஸ்துதியாகக் கொண்டேனேயொழிய வாஸ்தவமாக ஏற்கவில்லை. என்னுடன் இந்த ஆங்கில நாடகத்தில் கதாநாயகனாக நடித்தது காலஞ்சென்ற பூண்டி ரங்கநாத முதலியாருடைய மூன்றாவது குமாரனாகிய கிருஷ்ணசாமி என்னும் சிறுவன். அவன் மிகவும் நன்றாய் நடித்ததாக எல்லோரும் புகழ்ந்தனர். என்னுடைய அபிப் பிராயமும் அப்படியே. ஆங்கிலத்தில் பேசுவதில், வெள்ளைக் காரர்களைப்போல் உச்சரிப்புடையவர் என்று பூண்டி ரங்கநாத முதலியார் பெயர்பெற்றிருந்தார். அந்தக் குணத்தை அவரது பிள்ளைகளுள் கிருஷ்ணசாமி வஹித்திருந்தான். இந்தப்