பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

நாடக மேடை நினைவுகள்


நண்பர்கள்” என்னும் மற்றொரு பெயரே வழங்கி வருகிறது. இந்நாடகத்தை எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுக் கென்றே முக்கியமாக எழுதினேன். அவர் நடித்த கதாநாயகியாகிய “மனோரமா” என்னும் பெயரையே நாடகத்திற்கும் வைத்தேன். தான் கதாநாயகியாக நடிக்க வேண்டு மென்று அவர் என்னைக் கேட்டுக் கொள்ள, நாடகத்தில் நடிக்கும் அவருடைய சக்திக்கேற்றபடி இந்நாடகத்தை எழுதலானேன். மனோரமா என்னும் நாடகப் பாத்திரம் அவருக் கென்றே எழுதப்பட்டது என்பதை என் நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். எனது நண்பர் தென் இந்திய மேடையின் மீது நடித்துப் பெயர் பெற்ற நாடகப் பாத்திரங்களுக்குள் இது ஒரு முக்கியமானது.

இந்நாடகத்தை நான் எழுதியபொழுது ஒவ்வொரு காட்சியாக நான் எழுதி முடித்ததும், எனது நண்பர் அதை வாங்கிக் கொண்டு போய்ப் படித்து வருவது வழக்கம்; அப்படி வாசித்துக்கொண்டு வந்தவர், கடைசிக் காட்சியை எப்படி முடிக்கப் போகிறீர்கள்? என்று என்னை வினவினார். அதற்கு நான் இந்நாடகம் சோகரசமாகத்தான் முடிய வேண்டும், அப்படித்தான் முடிக்கப் போகிறேன் என்று கூறினேன்.

அதற்கிசையாது, அதை எப்படியாவது மங்களகரமாய் முடிக்க வேண்டுமென்று மன்றாடி, கதாநாயகனான சுந்தராதித்யன் இழைத்த பிழைக்காக அவன் கடைசியில் மரணமடைய வேண்டியதே என்று நான் எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேளாமற் போகவே, அவரது வேண்டுகோளுக்கிசைந்து மங்களகரமாய் முடித்தேன். இந்நாடகக் கதை, இதைப் படிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்குமென நம்பி அதை வரையாது விடுத்து, எப்படி மங்களகரமாய் முடித்தேன் என்பதை மாத்திரம் இங்கு எழுதுகிறேன். கடைசிக் காட்சியில் ஜெய பாலன் சுந்தராதித்யனைக் கொல்ல வாளை ஓங்கும் பொழுது, அவன்மீது பழிவாங்க வேண்டுமென்று அவனைத் தேடிக் கொண்டிருந்த சூரசேனன் அவனைக் கொல்கிறான்; மனோரமாவும் சுந்தராதித்யனும் தப்பிப் பிழைத்து மணம் செய்து கொள்கின்றனர். இப்படித்தான் 1896ஆம் வருஷம் நாங்கள் இந்நாடகத்தை ஆடியபொழுதும், பிறகு பலதரம், எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு “மனோரமா"வின் பாத்திரத்தைப் பூண்டபோதும் ஆடி முடித்தோம். இவ்வாறு