பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

221


இந்நாடகத்தை முடித்தது. தவறென்று எனது நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மேலே நான் தெரிவித்த இந்தியன் ஸ்டேஜ் என்னும் பத்திரிகையில் வெளியிட்டார். அவர் எடுத்துக்காட்டிய குற்றம் நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே என்று கருதினவனாய், இந்நாடகத்தை நான் அச்சிட்ட பொழுது சோககரமாகவே முடித்தேன். அதாவது, ஜெயபாலன் சுந்தராதித்யனைக் கொல்ல ஓங்கிய கத்தியை, தன் காதலனைக் காப்பாற்றவேண்டி மனோரமா தன் மார்பிற்றாங்கித் தடுத்து, தன் உயிர் இழக்கிறாள். பிறகே ஜெயபாலனை சூரசேனன் கொல்கிறான். அதன்மீது மனோரமா இறந்த துயர் ஆற்றாது, சுந்தராதித்யன் நித்யானந்தனைக் கொண்டு தன்னுயிரைப் போக்கிக் கொள்கிறான். இவ்வாறு சோககரமாய் நாடகத்தை முடித்து அச்சிட்ட பிறகு, இந்நாடகத்தில் தான் ஆடமாட்டேன் என்று கூறி எனதாருயிர் நண்பர், தான் சாகுமளவும் இந்நாடகத்தை வெறுத்து, மனோரமா பாத்திரத்தை ஆடுவதை விட்டனர். இதுதான் இந்நாடகம் எங்கள் சபையோரால் பல ஆண்டுகளாக ஆடப்படாததற்குக் காரணம். பிறகு என்னாருயிர் நண்பர் இவ்வுலகை விட்டு மேலுலகத்திற்குச் சென்ற பிறகுதான், இப்போதைக்கு நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக, எனது நண்பர் சத்யமூர்த்தி ஐயர், எங்கள் சபைக்குத் தமிழ்க் கண்டக்டராய் வந்த பொழுது, இந்நாடகம் ஆடப்பட்டது. சி. ரங்கவடிவேலு நாடக மேடை மீது உயிர் துறக்கப் பயந்தவரன்று; பிறகு நான் எழுதிய ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் மிகச் சிறந்த நாடகமாகிய “ஹாம்லெட்” என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பாகிய “அமலாதித்யன்” என்னும் நாடகத்தில், அபலையாக நடித்த பொழுது, நாடகத்தில் மரித்ததுமன்றி, அரங்கத்தின் பேரில் பாடையின் மீது தன்னை வளர்த்திச் சமாதியில் புதைக்கப்படவும் இசைந்திருக்கிறார். ஆயினும் இந்நாடகத்தில் மாத்திரம் சோககரமாய் முடித்தால் ஆடமாட்டேன் என்று ஆட்சேபித்தார். இதற்குக் காரணம், முதல் முதல் தான் கதாநாயகியாகத் தோன்றும் பொழுது கதை மங்களகரமாய் முடிய வேண்டுமென்று விரும்பினார்போலும். இது என் ஊகையேயாம். இதனுண்மையை மேலுலகில் நான் எனதா ருயிர் நண்பனை அடைந்த பிறகுதான், நான் அறியக்கூடும்! அவர் இவ்வுலகில் இருந்த பொழுது, இந்த மர்மத்தைப் பற்றி