பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

நாடக மேடை நினைவுகள்


நானும் வற்புறுத்திக் கேட்டவனன்று, அவரும் எனக்குச் சொன்னவரன்று.

இந்த “இரண்டு நண்பர்கள்” எனும் நாடகமானது இது வரையில் என்னிடமுள்ள குறிப்பின்படி, என் அனுமதியின் மீது, 29 தரம் ஆடப்பட்டுள்ளது. இது நான் எழுதியுள்ள நாடகங்களுள் முக்கியமானதொன்றாகப் பலரால் அங்கீகரிக்கப்பட்டும், மற்ற நாடகங்களைப் போல் அதிக முறை ஆடப்படாததற்குக் காரணம், இது மேடையில் நடிப்பதற்குக் கடினமான தென்பதேயாம். முக்கியமாக, கதாநாயகனாகிய சுந்திராதித்யன் பாகம் நடிப்பதற்கு எளிதல்ல; இவன் நாடகத்தின் கடைசிக் காட்சிகளில் பித்தம் பிடித்தவனாகிறான்; இந்தக் காட்சிகளை நடிக்க நான் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல; சென்னையில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப்போய் பைத்தியக்காரர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று கவனித்தேன்; பிறகு வாஸ்தவமாகப் பித்தம் பிடித்தவர்கள் எவர்களேனும் அகஸ்மாத்தாய் என் கண்ணெதிர்ப்பட்டால் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையெல்லாம் கற்றுணர்ந்தேன்; இவ்வாறு இரண்டு மாசங்கள் நான் பிரயத்தனப்பட்ட பிறகுதான், அரங்கத்தின் மீது அக்காட்சிகளை நடிக்க எனக்குத் தைரியமுண்டாயிற்று. எனக்குத் தெரிந்த வரையில் எனது நண்பராகிய தென் இந்திய ரெயில்வே அசிஸ்டென்ட் டிராபிக் சூபரின்டெண்டாகிய எப்.ஜி. நடேச ஐயர் ஒருவர்தான் இதை, எனக்குப் பின் நடிக்க முயன்றிருக்கின்றார். எங்கள் சபையில் இப்பாத்திரத்தை வேறொருவரும் இது வரையில் நடித்ததில்லை; இக்காரணம் பற்றியே, நாடகமாடுவதையே ஜீவனமாகக் கொண்டும் நடிக்கும் நாடகக் கம்பெனியார்களும், பால நாடக சபையார்களும் இந்த நாடகத்தின் அருகிற் போவதில்லையென நம்புகிறேன்.

இந்நாடகமானது எங்கள் சபையோரால் 1896ஆம் வருஷம் ஆகஸ்டு மாசம் 8ஆம் தேதி முதன் முதல் ஆடப்பட்டது. அச்சமயம் மேலே குறித்தபடி சி. ரங்கவடி வேலு மனோரமாவாகவும், நான் சுந்தராதித்யனாகவும் நடித்தோம். அ. கிருஷ்ணசாமி ஐயர் சத்யவதி வேடம் பூண்டார். காலஞ்சென்ற எம். வை: ரங்கசாமி ஐயங்கார் சுகுமாரனாக நடித்தார். அதுவரையில் ஸ்திரீவேஷம் பூண்டு கொண்டிருந்த ஜெயராம் நாயகர், ஜெயதேவனாக ஆண் வேஷம் பூண்டனர். ஹாஸ்யத்திற் கிடங்கொடுக்கும் பாகங்களாகிய நித்யானந்தன்,