பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

223


சூரசேனன், குருநாதன் பாகங்கள் முறையே, ராஜகணபதி முதலியார், துரைசாமி ஐயங்கார், ஷண்முகம் பிள்ளை இவர்கள் மூவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இனி அன்றைத் தினம் இந்நாடகத்தில் நடித்த முக்கியமான ஆக்டர்களைப்பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். இந்நாடகத்தில் தான் என்னாருயிர் நண்பர் முதல் முதல் பெரும்புகழ் பெற்றார் என்று கூற வேண்டும். இவர் எடுத்துக்கொண்ட மனோரமா எனும் நாடகப் பாத்திரம் நடிப்பதற்குக் கடினமானது; அநேக ரசபாவங்கள் அமைந்தது; அவற்றையெல்லாம் உண்மையில் உணர்ந்து நடிப்பது சுலபமல்ல. இப்படிப்பட்ட பாத்திரத்தில் பெயர் பெற்று, சபையோரையெல்லாம் சந்தோஷிக்கச் செய்தது எனது நண்பருடைய பாக்கியமாம். இது முதல் ஏறக்குறைய இருபத்தேழு வருஷங்கள் எங்கள் சபையில் நான் எழுதிய தமிழ் நாடகங்களில் இவர் கதாநாயகியாக நடித்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

சத்யவதியாக நடித்த கிருஷ்ணசாமி ஐயரும் மிகவும் நன்றாக நடித்தார். இப்பாத்திரம் சில நாட்களிலேயே வந்த போதிலும் சரியாக நடிப்பது சுலபமல்ல நான் எனது நாடகங்களில் வரைந்துள்ள ஸ்திரீ பாகங்களில் இது ஒரு முக்கியமான பாத்திரமாம். ஹாஸ்ய பாகத்திற்காக எழுதிய நித்யானந்தன், சூரசேனன், குருநாதன் ஆகிய மூன்று பாத்திரங்களும் வந்திருந்தவர்களுக்கு இடைவிடா நகைப்பை உண்டு பண்ணின. இந்நாடகத்தில்தான் முதன் முதல், எனது நண்பராகிய, பிறகு எங்கள் சபையின் முக்கியமான ஆண் வேடமும் ஸ்திரீவேடமும் தரித்த பெருமை வாய்ந்த, ஸ்ரீநிவாச ராகவாச்சாரி நடித்தார். இவர் அக்காலம் ஒரு சிறு பிள்ளையாயிருந்தார். அன்றியும் இப்பொழுது போல் அல்லாமல் மிகுந்த மெலிந்த தேகமுடையவராக இருந்தார். இவருக்கு இந்நாடகத்தில் வரும் இரண்டு தோழிகளின் பாகமாகிய கமலினி, விமலினி கொடுத்திருந்தேன். இவர் அன்று இந்நாடகத்தில் நடித்ததைக் கண்டவர்கள், இவர் இனிமேல் சங்கீத சாஹித்யங்களில் வல்லவராகி, கதா நாயகனாகவும், கதா நாயகியாகவும் பல நாடகங்களில் நடிப்பார் என்று ஒருவரும் எண்ணியிருக்க முடியாது; தெய்வகடாட்சத்தினால் அவ்வாறே நடந்தது. இவர் தற்காலமும் முக்கியமான ஆண் வேடங்கள் பூணும் ஸ்திதியிலிருப்பது எங்கள் சபை செய்த பாக்கியமே.