பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

நாடக மேடை நினைவுகள்


ஆண் வேடங்களில் எம்.வை. ரங்கசாமி ஐயங்கார் சுகுமாரனாக நடித்துப் பாடியது மிகவும் சிலாகிக்கப்பட்டது. எனது நண்பர் ஜெயராம் நாயகர் ஜெயதேவனாக நடித்ததைப்பற்றி அநேகர் அவருடைய பழைய ஸ்திரீ வேஷத்திற்குரிய பாவங்கள் அவரை விட்டகலவில்லை யென்று கூறினார்கள். நான் இதற்கு முன் கூறியபடி, ஸ்திரி வேடம் தரிப்பவர்கள் ஆண்வேடம் தரிக்கலாகாது என்பதற்கு இது ஒரு நிதர்சனமாகும். நான் சுந்தராதித்யனாக நடித்ததில், முக்கியமாகப் பைத்தியக்காரனாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பகுத்தறியுஞ் சக்தியுள்ள பல நண்பர்கள் கூறினர்.

இந்நாடகத்தை அன்று நாங்கள் நடித்த பொழுது நேரிட்ட ஒரு சிறு விபத்தை எழுத விரும்புகிறேன். ஒரு காட்சியில் சுந்தராதித்யன் தன்சைனியங்களுக்கு உற்சாகம் உண்டாக்கும் பொருட்டு, வீரம் விளைக்கும்படியான சில வார்த்தைகளைப் பேசுகிறான். இந்தக் காட்சியில் நடிக்கும் பொழுது அப்பாத்திரத்தைப் பூண்ட நான், நான்கு ராணுவ வீரர்கள் தோள்மேல் நின்று அம்மொழிகளைப் பேசினேன். அவ்வாறு பேசும்பொழுது கூர்மையான வாஸ்தவமான கத்தியை நான் வீசுங்கால், என்னைத் தூக்கிக்கொண்டிருந்தவர்களுள் ஒரு வராகிய ரங்கவடிவேலுவின் தமயனாகிய சி.கே. ரங்கநாதம் என்பவருடைய தலையில் நன்றாய்க் காயப்படுத்தி ரத்தம் பெருகச் செய்தேன். இதை நான் வேண்டுமென்று செய்தவனல்ல என்று இதை வாசிக்கும் எனது நேயர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியதில்லை. நன்றாக நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கையில் பிடித்திருக்கும் கத்தியானது யார் மீதாவது பட்டுக் காயப்படுத்துமே என்னும் கவனமில்லாமற் போயிற்று. காட்சி முடிந்து நான் கீழே இறங்கிய பின்தான், எனது நண்பர் ரத்தம் துளித்துக் கொண்டிருந்த காயத்தை காட்டி, என் அஜாக்கிரதையாலுண்டான விபத்தைத் தெரிவித்தார்! அதுவரையில் தன் நோயையும் பாராது என்னைத் தாங்கிக்கொண்டிருந்தார்! காயம் பட்டதே என்று, நோயைச் சகியாது தான் இருந்தவிடத்தை விட்டு அகன்றிருப்பாராயின், நான் கீழே விழுந்துதானிருக்கவேண்டும்! இப்பொழுதும் எப்பொழுதாவது நான் நாடக மேடையில் அஜாக்கிரதையா யிருப்பதைப் பற்றிப் பேச்சு வந்தால், “இரண்டு நண்பர்கள் நாடகத்தில் கத்தியால் என்னைத் தலையில் காயப்படுத்திய