பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

203


திரிவதாக எழுதிய காட்சிகள் நன்றாயிருந்தன வென்பதாம். ‘இரண்டு நண்பர்கள்’ என்னும் நாடகத்தில் நான் பைத்தியக்காரனாய் நடித்தது நன்றாயிருந்தது என்று எனது நண்பர்கள் கூறவே, அத்தகைய காட்சிகள் இதில் சேர்த்து எழுதினேன். எனது நாடகங்களை யெல்லாம் மொத்தமாக வாங்க வேண்டுமென்று யாராவது என்னிடம் வந்து கேட்டால், இதைத் தவிர மற்ற நாடகங்களை வாங்குகள், என்று நான் சொல்வது வழக்கம். இதை வாசிக்கும் எனது நண்பர்களில் யாராவது, நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் எது கீழ்ப்பட்டது என்று அறிய வேண்டுமென்றால், இதை வாசிக்கலாம். ஒரு நாடகக் கர்த்தா முழு மனவெழுச்சியுடன் எழுதுவதை விட்டு, ஏதோ அக்கறைக்காக, ஒன்றை அவசரப்பட்டு எழுதி முடிப்பதன் கெடுதி இதுதான். ஆயினும் இந்த அனுபவமும், முடிவில் இன்னது செய்யக்கூடாது என்னும் புத்திமதியை எனக்குப் புகட்டியதல்லவா? தற்காலத்தில் இவ்வுலகிலுள்ள தனவந்தர்களுள் எல்லாம் மேம்பட்டவராகிய போர்டு (Ford) என்னும் அமெரிக்கா தேசத்தில் வாழும் சீமான், ஏதாவது ஒரு காரியத்தில் நாம் தவறினால், அதைத் தோல்வியாக நாம் கொள்ளலாகாது; அதைப் பிறகு நாம் வெற்றி பெறுவதற்கு அனுகுணமான அனுபவமாகக்கொள்ள வேண்டுமென்று ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருக்கிறார். நாடகமெழுத விரும்பும் எனது நண்பர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. ஏதாவது நாடகமொன்றை எழுதுங்கால், எழுதும் நமக்கே அது எழுதுங்கால் திருப்திகரகமாயில்லாவிட்டால், அதை எழுதி முடிக்காதிருப்பார்களாக. இந்த அனுபவத்தின் பிறகு, என்னை எழுதும்படி என் மனோ உற்சாகமானது உந்தினாலன்றி ஒன்றையும் எழுதுவதில்லை என்று தீர்மானித்து, அதன்படி இந்த முப்பத்தைந்து வருடங்களாக நடந்து வந்திருக்கிறேன். ஏதாவதொரு நாடகத்தை எழுதிக் கொண்டு வரும்பொழுது, இவ்வுற்சாகம் குன்றி, மனத்தளர்ச்சி அடைந்தால், உடனே நான் எழுதும் பென்சிலையும் காகிதத்தையும் மேஜையின்மீது வைத்துவிட்டு எழுந்து விடுவேன். பிறகு, சில மணி நேரமோ, சில தினங்களோ, மாதங்களோ, வருஷங்களோ சென்று அந்த உற்சாகம் திரும்பி வந்த பிறகுதான், நான் எழுத ஆரம்பித்ததை எழுதி முடிப்பேன். இதற்கு ஓர் உதாரணமாக, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் ஹாம்லெட் எனும் நாடகத்தின் தமிழ்