பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

229


கூடிய சீக்கிரத்தில் வேஷம் தரிக்கும்படிச் சொல்லிவிட்டு, என் நண்பர்களாகிய ராஜகணபதி முதலியாரையும் துரைசாமி ஐயங்காரையும் அழைத்தது, நான் மேடையின் பேரில் போய் நாடகத்தை ஆரம்பிக்கிறேன், நீங்கள் இன்னின்ன மாதிரி கேளுங்கள், அதற்கு நான் இன்னின்னபடி பதில் உரைக்கிறேன் என்று கூறிவிட்டுப் பிள்ளையார் பாட்டு ஆனவுடன், குறித்த மணிப்பிரகாரம் திரையைத் தூர்க்கச்சொல்லிவிட்டு, அரங்கத்தின் மீது சென்று, கதையை ஒட்டிய தனிமொழி ஒன்றை ஆரம்பித்தவனாய், பிறகு மேற்சொன்ன இரண்டு ஆக்டர்களும் வர, அவர்களுடன் நாடகத்தின் கதை சம்பந்தமான சம்பாஷணை செய்து காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தேன். பிறகு கிருஷ்ணசாமி ஐயரும் ரங்கவடிவேலும் பக்கப்படுதாவண்டை வந்து நாங்கள் சித்தமாயிருப்பதாகத் தெரிவித்தவுடன், நாங்கள் மேடையை விட்டகன்றோம். உடனே அவர்கள் பிரவேசித்து, நாடகத்தில் நான் எழுதிய கதையின்படி ஆரம்பம் செய்தார்கள். அரங்கத்தின் மீது கால்மணி நேரம் வரையில் நடந்ததெல்லாம் நான் நாடகத்தில் எழுதிய பாகம் அல்ல, அந்தக்ஷணம் கற்பனை செய்தது என்பதை, நாடகம் பார்க்க வந்தவர்கள் அறிந்திலர்! அச்சமயம் இந்நாடகமானது அச்சிடாதிருந்தபடியால் இந்தக் கதை சாத்தியமாயிருந்தது; அச்சிட்டு, யாராவது படித்திருந்தால், நடந்த சூழ்ச்சி வெளியாயிருக்கும்! அக்காலத்தில் எப்படியாவது குறித்த மணிப்பிரகாரம் நாடகத்தை ஆரம்பஞ் செய்ய வேண்டுமென்று அவ்வளவு கஷ்டப்பட்டோம். இப் பொழுதும் அப்பெயர் கெடாதபடி எங்கள் சபையாரும், மற்ற சபையோர்களும் எல்லா நாடகங்களிலும் விளம்பரத்தில் குறித்த மணிப்பிரகாரம் ஆரம்பஞ் செய்வாரென வேண்டி இதை எழுதலானேன்.

இந் நாடகத்தின் இடையில் பஞ்சத்தினால் வருந்தும் ஜனங்களின் கஷ்டங்களை மௌனக்காட்சிகளாக (Tableau Vivantes) காட்டியது நன்றாயிருந்ததென்று மெச்சப்பட்டது. மேற்கூறியவைகளைவிட வேறு கவனிக்கத்தக்க விஷயங்கள் இந்நாடகத்தைப்பற்றி எனக்கொன்றும் ஞாபகமில்லை.

இந்நாடகமானது எங்கள் சபையோரால் மறுமுறை ஆடப் படவேயில்லை. அன்றியும் இதுவரையில் ஐந்து முறைதான், மற்றவர்களால் ஆடப்பட்டிருக்கிறது. இதுதான் நான் எழுதிய நாடகங்களுக்குள் மிகவும் குறைவாக ஆடப்பட்ட நாடகம்.