பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

நாடக மேடை நினைவுகள்




இந்த 1897ஆம் வருஷத்தில் தெலுங்கில் எங்கள் சபையார் அரிச்சந்திர நாடகத்தை ஆடினார்கள். பல்லாரி வக்கீல் ராகவாசார்லு அவர்கள் எங்கள் சபையில் தெலுங்கு பாஷையில் ஆடத்தொடங்குவதற்கு முன், தெலுங்கில் எங்கள் சபையார் ஆடிய நாடகங்களுக்குள் எல்லாம் இதுவே மிகச் சிறந்ததென நான் உறுதியாய்க் கூறக்கூடும். இந்நாடகமானது எங்கள் சபைக் காரியதரிசியாயிருந்த ஊ. முத்துக்குமாரசாமி செட்டியாரால் எழுதப்பட்டது. நாடக மேடையில் நாடகக் கம்பெனிகள் இக்கதையை ரசாபாசமாக நடத்துவது போலில்லாமல், தற்கால நாகரீகத்திற்கேற்றபடி ஒழுங்காய் எழுதியிருந்தார். இந்நாடகமானது மிகவும் சோபித்ததற்கு ஒரு முக்கியமான காரணம், கதாநாயகனும் கதா நாயகியும் தக்க ஆக்டர்களால் நடிக்கப்பட்டதே.

முன்பே நான் எனது நண்பர்களுக்கு எடுத்துக் கூறியுள்ள கே. சீனிவாசன் என்பவர் ஹரிச்சந்திரனாக மிகவும் நன்றாய் நடித்தார். இவர் உருவம் மிகவும் கம்பீரமானது; குரலும் கம்பீரமானது; மேடையில் நடிப்பதும் மிகவும் கம்பீரமாயிருக்கும்; இத்தகைய குணம் வாய்ந்தவர்ஹரிச்சந்திரனாக நடித்த பொழுது தக்க பெயர் பெற்றது ஆச்சரியமன்று. இவர் சங்கீதத்தில், மற்ற அரிச்சந்திரர்களைப்போல் அத்தனை பாட்டுகள் பாடா விட்டாலும், பாடியவரையில் மிகவும் ஸ்பஷ்டமாயும் திருத்தமாயும் பாடுவார். இந்நாடகத்தில் இவருக்கு சமானமாக அ. கிருஷ்ணசாமி ஐயர், சந்திரமதியாக நடித்தார். இந்நண்பர் ஆடிய பாத்திரங்களுள் சந்திரமதியானது ஒரு மிகச் சிறந்ததென்றே கூற வேண்டும். தமிழ் பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் கதாநாயகியாக நடித்துப் பெயர் பெற்றவர் இவர் ஒருவரே. இவர் தெலுங்கு பாஷையில் பேசும் பொழுது தமிழ் உச்சரிப்பு ஒன்றும் வராது; தமிழில் பேசுங்கால் தெலுங்கு சப்தம் கொஞ்சமும் கலக்காது. இவருடைய சங்கீதமானது நான் முன்பே குறித்தபடி முதல் தரமானது. எங்கள் சபையில் ஸ்திரீ வேஷம் தரிப்பவர்களுக்குள் இவருடைய சங்கீதத்தைவிட மேலானதை நான் கேட்டதில்லை. இனி கேட்கவும் போகிறதில்லையென நம்புகிறேன். நாடக மேடையில் நின்று இவர் பாடும்கால், அவருக்குள்ள ஒரு பெரும் அருமையான குணத்தை இங்கெடுத்துக் கூற விரும்புகிறேன். சாதாரணமாக நூற்றில் தொண்ணுற்றொன்பது பெயர் மேடையில்