பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

231


பாடும் பொழுது, வசனத்தை நிறுத்தி, சற்றுத் தாமதித்து, ஸ்ருதியுடன் தங்கள் குரல் கலக்கிறதா என்று பார்த்துக் கொண்டு, பிறகு ஆரம்பிப்பது வழக்கம். இவர் ஒருவர்தான், நான் அறிந்த வரையில், பேசிக்கொண்டேயிருக்கும் பொழுது, சற்றும் தாமதிக்காமலும் தொண்டையைக் கனைத்துக் கொள்ளாமலும், பக்கவாத்தியக்காரர்கள் ஆரம்பிக்கிறார்களா என்று கவனிக்காமலும், நடித்துக் கொண்டிருக்கும் மனோபாவத்தைக் கொஞ்சமேனும் குறைக்காமலும், உடனே சங்கீதத்தை ஆரம்பிப்பவர்; எங்கு வசனம் முடிகிறது, எங்கு சங்கீதம் ஆரம்பிக்கிறது என்று கேட்பவர் சந்தேகிக்கும்படியாக அவ்வளவு துரிதமாய் ஆரம்பிப்பார். தற்காலத்தில் பெயர் பெற்ற பாடகர்கள் என்று நாடக மேடையில் வரும் சில ஆக்டர்கள், தாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பேச்சை நிறுத்தி விட்டு, தொண்டையைக் கனைத்துக்கொண்டு, மேடையின் பேரில் இருக்கும் ஹார்மோனியம் வாசிக்கும் பக்க வாத்தியக்காரனிடம் போய் நின்றுகொண்டு, உம் என்று குரல் எழுப்பி, நடிக்க வேண்டிய பாவம் கொஞ்சமும் முகத்தில் இல்லாதவர்களாகிப் பாட ஆரம்பிப்பதைக் கண்டவர்கள், எனது நண்பராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் அக்காலங்களில் மேடையில் பாடும் திறத்தைக் கண்டிருப்பார்களாயின், அதன் அருமை அவர்களுக்கு விளங்கியிருக்கும். இவருக்கு, தற்காலம் என்னைப் போல் வயதாகியும் தேகம் தளர்ந்த போதிலும், குரலின் இனிமையும் பாடும் சக்தியும் குன்றவில்லை யென்றே நான் கூற வேண்டும். கடுகு செத்தாலும் காரம் போகாதல்லவா? (என் நண்பர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருப்பாராக!) இவர் இச் சந்திரமதி வேஷத்தைப் பன்முறை எங்கள் சபையில் பூண்டிருக்கின்றனர். அம்முறைகளிலெல்லாம், ஸ்மசானத்தில் இவர் சந்திரமதியாகப் புலம்பும் காட்சிகள் வரும்தோறும், கண்ணீர் விடாதார் ஒருவருமில்லையென்றே சொல்ல வேண்டும். இந்நாடகத்தை முதல் முறை எங்கள் சபையார் நடித்தபொழுது, வந்திருந்த ஜனங்களெல்லாம் மிகவும் நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்தபடியால், மறுவாரமே இதை மறுபடியும் ஆடினோம். எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் முதல் நாடகத்திற்கு வந்ததைவிட இரண்டாம் தரம் அதிக ஜனங்கள் வந்திருந்தனர்; இது இந்நாடகத்தை ஆடின பெருமைக்கு ஒரு அத்தாட்சியாகும். இந்நாடகமானது,