பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

233


காரணங்கள் பல உண்டெனக் கண்டறிந்தேன். இப்பாரசீக நாடகக் கம்பெனியார் சென்னையில் நாடகாபிமானிகள் மனத்தில் ஒரு பெரும் குழப்பத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணினதுமன்றி, தென் இந்திய மேடைக்கே பல சீர்திருத்தங்கள் உண்டு பண்ணினர். ஆதலின், இவர்களால் தென்னிந்திய மேடை அடைந்த சீர்திருத்தங்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுதுகிறேன்.

முதலாவது, இவர்கள் குறித்த மணிப் பிரகாரம் நாடகங்களைத் தவறாமல் ஆரம்பிப்பார்கள். இன்னின்ன நாடகங்களுக்கு இத்தனை மணி என்று ஏற்படுத்தி அதன் பிரகாரம் முடிப்பார்கள். அன்றியும் ஒவ்வொரு நாடகத்திற்கும் இரண்டோ மூன்றோ அவகாசங்கள் (Intervals) என்று ஏற்படுத்தி அதன் பிரகாரம் கொடுக்கும் அவகாசங்களன்றி, காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் வேறு அவகாசமே கிடையாது. இவர்கள் சென்னைக்கு வருவதற்கு முன்பாக, எல்லா நாடகச் சபைகளிலும் கம்பெனிகளிலும் (எங்கள் சபை உட்பட), ஒவ்வொரு காட்சிக்கும் பிறகு அவகாசம் கொடுப்பது வழக்கம். இப்படிச் செய்வதனால் நாடகத்தை முடிக்கும் காலம் நீடிக்கும். அன்றியும் மிகுந்த ரசமான பாகங்கள் வரும்பொழுது, காட்சிக்குக் காட்சி நீடித்த அவகாசத்தைக் கொடுப்பதனால், அந்த ரசத்திற்குக் குறை உண்டாகிறது. இக்குற்றத்தைப் போக்க வழிகாட்டியவர்கள் இப்பாரசீக நாடகக் கம்பெனியாரே. இவர்கள் சென்னைக்கு வந்து போனபிறகு, இவர்களைப் பார்த்து சில நாடகக் கம்பெனியார் இதன்படி நடக்க முயன்றனர்; எனினும், இக்குறை தென் இந்திய நாடக மேடையை விட்டு இன்னும் அகலவில்லை. எங்கள் சபையிலும் சில நாடகங்களில் இவ்வாறு அதிக அவகாசமின்றி நடத்தியபோதிலும், ஏனைய நாடகங்களில் பழையபடிதான் நடந்து வருகிறது. இதைக் கவனித்து இனியாவது எங்கள் சபையோரும் ஏனையோரும் இதனைப் பரிஹரிப்பார்களாக. இதைச் செய்வது கடினமல்ல; நாடகம் எழுதும் பொழுதே, நாடகக் கர்த்தா இதன்மீது ஒரு கண்ணுடையவனாய், அரங்க மேடையில் அதிக ஏற்பாடுகள் செய்ய வேண்டிய ஒரு காட்சிக்குப் பின், வெறும் திரையுடன் நடத்த வேண்டிய காட்சியொன்று எழுதி, இவ்வாறு மாற்றிமாற்றி எழுதிக்கொண்டு போனால், இது சுலபமாய் முடியும்; அன்றியும் கண்டக்டர்கள்