பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

நாடக மேடை நினைவுகள்


பெரிய நாடகங்களை ஆடுவதற்காகச் சுருக்கும் பொழுது இதைக் கவனித்துச் சுருக்கினால், நலமாயிருக்கும்.

இரண்டாவது, இப் பராசீகக் கம்பெனியார், நாடகக் காட்சி ளைத் தக்கபடி காட்டுவதில் சிறப்புற்றிருந்தனர். ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றபடி அரங்கத்தை ஏற்படுத்துவார்கள். இதற்கு முன்பாக இருந்த, சகுனிராஜன் துரியோதனராஜனிடம் அந்த ரங்கமாய்ப் பேசும் காட்சியில், ஒரு தெருப் படுதாவை விட்டு, அந்தத் தெருவின் மத்தியில், துரியோதனனுக்கும் சகுனி ராஜனுக்கும் இரண்டு பென்ட்வுட் (Bentwood) நாற்காலிகள் போட்டிருக்கும்படியான ஆபாசங்கள் எல்லாம் இவர்களிடம் கிடையா. ஒரு பூந்தோட்டமோ, அரசியின் அந்தப்புரமோ, கடுங்கானகமோ, யுத்தக்களமோ காட்டுங்கால், அவ்வவற்றிற்கேற்றபடி, ஏராளமான பொருள் செலவழித்து தக்கபடி ஏற்பாடு செய்வார்கள். இவர்களுக்குப் பிறகுதான், தென் இந்திய மேடையில் இவ்வாறு செய்ய வேண்டியது உசிதம் என்பது, நாடகக் கம்பெனிகளுக்கும் சபைகளுக்கும், மனத்தில் உதித்தது என்றே நான் சொல்ல வேண்டும். ஆயினும் இத்தனைவருஷங்களாகியும், இவ்விஷயத்தில் நூற்றுக்கு ஐந்து பாகம்தான் சீர்திருத்தப்பட்டதென்றும், இன்னும் 95 பாகம் சீர்திருத்த வேண்டுமென்பதும் என் திடமான அபிப்பிராயம். இப் பாரசீகக் கம்பெனியாரின் காட்சி ஏற்பாடுகளை (Scenic arrangements) பார்ப்பதற்கே பாதிப்பெயர்டிக்கட்டுகள் வாங்கிக்கொண்டு போனார்கள் என்று நான் சொல்ல வேண்டும். அன்றியும் இக்காட்சி ஏற்பாடுகளில், பக்கத் திரைகளும் (side wings) மேல் தொங்கட்டங்களும் (Flies) காட்சிக்காக விடப்பட்டிருக்கும். முக்கியமான திரைக்கு ஒத்திருக்க வேண்டும் என்னும் விஷயம், தென் இந்திய மேடையானது இவர்களிடமிருந்துதான் கற்றது. இதற்கு முன் அரங்கத்தின் மத்தியில் அடர்ந்த காட்டுப் படுதா விட்டிருக்கும் பக்கங்களில் மஹா ராஜாவின் தர்பாருக்குரிய இரண்டு தூண்கள் நிற்கும். மேலே வெல்வெட் (Velvet) ஜாலர்கள் விட்டிருக்கும்! அல்லது இந்திரன் கொலுவிற்காக, அரங்கத்தில் தர்பார் திரை விட்டிருக்கும். பக்கங்களில் மரங்களின் பக்கப் படுதாக்கள் இருக்கும். மேலே காட்டு ஜாலர் விட்டிருக்கும்! இப்படிப்பட்ட ஆபாசங்கள் தவறென்றும், அவற்றை நிவர்த்திக்கும் மார்க்கம் இப்படியென்றும் காட்டினவர்கள் இப்பாரசீகக் கம்பெனியாரே.