பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

237


நிரப்பி எழுதினேன். இதற்குத் தகுந்த ஏற்பாடுகளையும் அப்புவைக் கொண்டு செய்து வைத்தேன். ஒத்திகைகளையெல்லாம் நடத்தி நாடகதினமானது ஒரு வாரமோபத்து நாளோ இருக்கும் சமயத்தில் நடந்த ஒரு விந்தையைக் கூறுகிறேன். சில தினங்களாக இந்நாடகத்தை ஒத்திகை செய்யும் பொழுது ஆக்டர்கள் ஒருவாறாக ஒத்திகை சரியாக நடத்தவில்லை. இதற்குக் காரணம் என்னவென்று நான் மெல்ல ரகசியமாய் விசாரித்த பொழுது, ஆக்டர்களில் பெரும்பாலார் என் மீது அதிருப்தியுடையவர்களாய், தாங்கள் எடுத்துக் கொண்ட பாகங்களை ஒருநாள் எல்லோரும் திருப்பிக் கொடுக்கப் போகிறதாக நிச்சயித்திருப்பதாக அறிந்தேன்! இதையறிந்தவுடன் இவர்கள் என்மீது எதற்காக வெறுப்புற்றிருக்கின்றனர் என்று அவர்களைக் கேட்டு, அக்காரணங்களை நீக்கி அவர்களைச் சமாதானம் செய்ய வேண்டியது என் கடமையன்றோ ? அப்படிச் செய்யாமல், என் யௌவனத்தின் கொழுப்பில் (அப்பொழுது எனக்குச் சரியாக வயது 24) “ஆஹா! அப்படியா செய்யத் தீர்மானித்திருக்கிறார்கள்! நானும் ஒரு கை பார்த்து விடுகிறேன்!” என்று பிடிவாதம் கொண்டவனாய், யார் யார் வேண்டாமென்று விடப் போகிறார்கள் என்று என் மனத்திற்பட்டதோ அவர்களுடைய பாத்திரங்களுக்கு வேறு ஆக்கடர்களை ரகசியமாகச் சித்தம் செய்து வைத்திருந்தேன். நாடகம் போடுவதற்குக்குறிக்கப்பட்ட நாளுக்கு ஒரு வாரமோ பத்து நாளோ முன்னதாக ஒரு தினம், இந்த ஆக்டர்களெல்லாம் ஒவ்வொருவராக என்னிடம் வந்து, ஏதோ ஒவ்வொரு சாக்கைச் சொல்லி, தங்களால் இந்த நாடகத்தில் ஆட முடியாதென்று தங்கள் பாகங்களை என்னிடம் திருப்பிக் கொடுத்தனர். ஏன் இப்படிச் செய்கிறாய் என்று ஒருவனையும் கேளாது, புன்னகையுடன் அவர்கள் பாகங்களை வாங்கிக் கொண்டு, சபையின் நோட்டீசுகள் ஒட்டும் பலகையிலிருந்த அவர்கள் பெயரை ஒவ்வொன்றாய் அடித்து, முன்பே நான் நியமித்திருந்த இதர ஆக்டர்களின் பெயரை எழுதிக் கொண்டே வந்தேன்! இவ்வாறு செய்வான் என்று அவர்கள் கொஞ்சமும் எதிர்ப்பார்த்தவர்களல்ல. ஆகவே என் செய்கையானது அவர்களுக்கு என் மீது முன்பைவிட அதிகக்கோபத்தையுண்டு பண்ணியது போலும். பிறகு இரண்டு மூன்று நாள் புதிய ஆக்டர்களுடன், ஒன்றும் நடவாதது போல், பழையபடி