பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

நாடக மேடை நினைவுகள்


ஒத்திகைகளை நடத்தி வந்தேன். நாம் எல்லாம் கைவிட்டால் இவன் எப்படி நாடகத்தை நடத்துவான் என்று எண்ணியிருந்தவர்கள், தாங்கள் இன்றியே நாடகம் நடை பெறும் போலிருக்கின்றதேயென்று பயந்தவர்களாய், கடைசியாக ஒரு யுக்தி செய்து பார்த்தார்கள். நாடகத்திற்கு இன்னும் நாலைந்து நாள்தான் இருக்க, ஒரு நாள் நான் கையில் வைத்துக்கொண்டு ஒத்திகை நடத்தும், என் கையழுத்துப் புஸ்தகம் காணாமற் போயிற்று! அக்காலத்தில் இந்நாடகமானது அச்சிடப்படவில்லை; என் கையெழுத்துப் புஸ்தகம் ஒன்றுதான் இருந்தது. இதைப்பார்த்து ஆக்டர்களெல்லாம் தங்கள் தங்கள் பாகங்களை எழுதிக்கொண்டனர். என்னுடைய சொந்த பாகத்தை இதினின்றும் நான் படித்துக் கொண்டிருந்தேன். இது காணாமற் போனால் நான் ஒத்திகைகளை எப்படி நடத்துவது? நாடகதினம் நாடகத்தை எப்படி நடத்துவது? நான் செய்த தப்பிதத்திற்கு முதல் பிராயச்சித்தம் உடனே கிடைத்தது. புஸ்தகம் காணாமற் போகவே இடி விழுந்தவன் போல் ஆனேன்! யாரைக் கேட்டபோதிலும், புஸ்தகம் என்னவாயிற் றென்று தங்களுக்குத் தெரியாதென்று சொன்னார்கள். என் மீது வெருப்புக் கொண்டவர்களுள் ஒருவன்தான் இதைச் செய்திருக்க வேண்டுமென்று என் மனத்தில் திடமாய்ப் பட்டபோதிலும், நான் யாரிடம் போய் நீதான் செய்திருக்க வேண்டுமென்று கேட்பது? நான் மனத்தில் அடங்காக் கோபமும் துயரமும் கொண்டேனாயினும், வெளிக்கு அதைக் காட்டாமல், “சரிதான், அப்புஸ்தகம் காணாமற் போனாலென்ன? ஒன்றும் கெட்டுப் போகவில்லை” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டேன். அன்றிரவெல்லாம் ஏறக்குறைய நான் தூங்கவேயில்லை யென்றே சொல்ல வேண்டும்! என்னிடமுள்ள என்ன குற்றங்களினால், எனது நண்பர்கள், மேலே கூறியபடி என்னைக் கைவிடச் செய்தேனோ, அதற்கு இரண்டாவது பிராயச்சித்தம் அன்றிரவு அனுபவித்தேன். என் நாடக புஸ்தகத்தைத் திருடினவனைக் கண்டு பிடித்துப் பழி வாங்குவது.அப்புறமிருக்கட்டும். இப்பொழுது நாகடத்தை எப்படி நடத்துவது என்பதுதான் எனக்குப் பெருங் கவலையைத் தந்தது. கடைசியில் ஒன்றும் தோன்றாதவனாய், எல்லாம் வல்ல கடவுள்மீது பாரத்தைச் சுமத்தினவனாய்க்