பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

239


கொஞ்சம் தெளிவடைந்தவனாய், என் காலைக் கடனை முடித்து, பிறகு கடவுளைத் தொழுதுவிட்டு நான் இப்பொழுது உட்கார்ந்து கொண்டு எந்த மேஜையின் மீது இந்நாடக மேடை விளைவுகளை எழுதுகிறேனோ, அதே மேஜையின் அருகில் உட்கார்ந்து, நான் எழுதிய நாடகத்தை மறுபடியும் எழுதவாரம்பித்தேன்! அப்பொழுது எனக்கு நல்ல ஞாபகசக்தி இருந்தகாலம்; அன்றியும் பன்முறை இந்நாடகத்தை ஒத்திகை நடத்தியிருந்தபடியால், ஏறக்குறைய எல்லா வசனமும் எனக்கு ஞாபகமிருந்தது. இரண்டு மணி சாவகாசத்தில் இரண்டு மூன்று காட்சிகளை இவ்வாறு எழுதி முடித்துக்கொண்டிருந்தேன்; அப்பொழுது எதிர்ப்பட்சம் சார்ந்த என் நண்பர்களில் ஒருவர் (இவர்தான் என் கையெழுத்துப் புஸ்தகத்தை அபகரித்தவர் என்று இதை வாசிக்கும் நண்பர்கள் இனி அறிவார்கள்); மெல்ல என்னிடம் வந்து உட்கார்ந்து, “என்ன செய்கிறாய் சம்பந்தம்?” என்று கேட்டார்; எனக்கு இவர்மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தபோதிலும், அதை வெளிக்குக் காட்டாமல், “ஒன்றுமில்லை, காணாமற்போன நாடகத்தை மறுபடியும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று காட்சிகள் எழுதியாயது; மற்றவைகளையும் இன்று சாயங்காலத்திற்கு முன் எழுதி முடித்து விடுவேன்!” என்று பதில் கூறிவிட்டு எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு கொஞ்ச நேரம் ஏதோ மற்ற விஷயங்ளைப் பற்றிப் பேசிவிட்டு, இவர் சென்றனர். அன்று சாயங்காலம் நான் சபைக்குப் போகுமுன், எங்கள் சபை பில் கலெக்டர், தான் சாலை வீதியில் போய்க் கொண்டிருந்த பொழுது அகஸ்மாத்தாய் எனது நாகடக் காகிதங்கள் அவனுக்குக் காணப்பட்டதாகக் கூறி அக் காகிதங்களை என்னிடம் கொடுத்தான்! இவன் சொன்னது நம்பத்தக்கதா இல்லையா என்று சற்றும் யோசியாதவனாய், அம்மட்டும் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டவனாய், இறைவனின் அருளைப் போற்றிவிட்டு, வழக்கம் போல் ஒத்திகை நடத்தினேன். இதற்குப் பிறகு சுமார் ஆறுமாதம் பொறுத்துத் தான் . நடந்த உண்மையை அப் பில் கலெக்டரிமிருந்து அறிந்தேன். அவனை அழைத்து அந்தரங்கமாய், ‘நடந்த உண்மையைச் சொல், இதனால் உனக்கு ஒரு கெடுதியும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று நான் வாக்களித்த பின்தான், அவன் என் காகிதங்களை அபகரித்தவர்