பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

நாடக மேடை நினைவுகள்


திகைத்துக் கொண்டிருக்கும் தருவாயில், நாடகமேடையில் அதிகப் பயிற்சியில்லாதிருந்த போதிலும், எனது தமயனார் ப. ஆறுமுக முதலியார், “நீ பயப்படவேண்டாம். அதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி, எனக்குக் கைகொடுத்துத் தூக்கினார். “தம்பி யுள்ளவன் படைக்கஞ்சான்” என்னும் பழமொழியொன்றுண்டு; என் அளவில் இப்படிப்பட்ட “அண்ணன் உள்ளவன் எதற்கும் அஞ்சான்” என்று மாற்ற வேண்டும் அப்பழைய மொழியை! அந்தப் பாகத்தை எடுத்துக்கொண்டு, தனக்கு ஞாபகசக்தி கொஞ்சம் குறைவாயிருந்தபோதிலும், கஷ்டப்பட்டுப் படித்து, நாடக தினத்தில் நன்றாய் நடித்தார் என்றே நான் கூற வேண்டும். இதுவரையில் தமிழ் மேடையின்மீதே ஏறியறியாத ஆங்கிலத்தில் பிரபல ஆக்டர் என்று பெயர் பெற்ற எம். சுந்தரேசையர் பி.ஏ., இந்நாடத்தில் முதற் காட்சியில் போஜேந்திரனாக நடித்தார். அன்றியும் பிற்காலம் எங்கள் சபையில் பல பாத்திரங்கள் பூண்டு, பெயர் எடுத்த ரங்கவடிவேலுவின் மைத்துனராகிய தாமோதர முதலியார் வீராந்தகனாக இந்நாடகத்தில் எங்கள் சபையில் முதல் முதல் நடித்தார். இந்தப் பாகம் முதலில் வேறொருவருக்குக் கொடுத்திருந்தது; அவர் வேண்டாம் என்று திருப்பிவிட்ட பொழுது, ரங்கவடிவேலுவின் வேண்டுகோளின்படி இதை இவருக்குக் கொடுத்தேன். இவர் பிறகு பல நாடகங்களில் நடித்துப் பெயர் பெற்றதையும், அநேகவிதத்தில் எங்கள் சபைக்கு உதவியதையும் பற்றிப் பிறகு எழுத வேண்டியவனாய் இருக்கிறேன். நந்தபாலன் வேஷம் ஜெயராம் நாயகர் வேண்டாம் என்று மறுக்கவே டி. கே. ஸ்ரீனிவாசாச்சாரி என்னும் புதிய ஆக்டருக்குக் கொடுத்தேன். இவர் இதற்கு முன் எனக்கு ஞாபமிருக்கிறபடி எங்கள் சபையில் தெலுங்கிலேயே ஆக்டு செய்தவர். ஆயினும் இரண்டு மூன்று தினங்களுக்குள் தன் பாகத்தைப் படித்து எல்லாம் கற்றுக்கொண்டு, தமிழில் நன்றாக நடித்தது மெச்சத்தக்கதே. மற்றொரு ஆக்டராகிய ரங்கமணி நாயுடு என்பவர் தனநாதன் வேஷத்தை மேற்சொன்ன காரணத்தால் கடைசி வாரத்தில் எடுத்துக்கொண்டு நடித்தார். சத்ருஜித் வேஷம் நான் பூண்டு கண் குருடான பிற்கு நடித்த காட்சிகள் நன்றாயிருந்ததெனச் சென்னார்கள் என்று நினைக்கிறேன். இந்நாடகம் நடிக்கப்பட்டபொழுது நடந்த ஒரு விருத்தாந்தம்