பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

243


எனக்கு முக்கியமாக ஞாபகமிருக்கிறது. கடைசி காட்சிகள் ஒன்றில் கதாநாயகனான சத்ருஜித் தூக்கிலிடப்படுகிறான். தூக்கிலிடப்பட்டு மரணா வஸ்தையிலிருக்கும் தருணத்தில், அவனது மைத்துனன் தூரத்திலிருந்து ஓர் அம்பையெய்து தூக்குக் கயிற்றை அறுக்க சத்ருஜித் பிழைக்கின்றான். இக் காட்சிக்காக தூக்கு மரம் ஒன்று சித்தம் செய்தோம். இக்காட்சியை ஆரம்பிக்குமுன், தூக்குப் பலகையைத் தட்டவேண்டி, சேவகர்கள் வேஷம் பூண்டிருந்த ஒவ்வொருவரையும் கேட்டும்,ஒவ்வொருவரும் அது செய்வது பாபம், நாங்கள் செய்யமாட்டோம் என்று மறுத்தார்கள்! இன்னது செய்வதென்று அறியாது நான் திகைத்து நிற்க, தூக்கு மரத்தை ஏற்பாடு செய்த எங்கள் வேலையாளாகிய அப்பு தான் செய்வதாக ஒப்புக்கொண்டான். காட்சி மேடையின் பேரில் நடிக்கும் பொழுது அப்படியே செய்தான். தூக்குக் கயிறு என் கழுத்தை வாஸ்தவத்தில் நெருக்காமலிருக்கவும், என் உடலின் பளுவைத் தாங்குவதற்கும், தீயில் காய்ச்சிக் கருக்கப்பட்ட பித்தளைக் கம்பிகள் இரண்டு என் தோள்களில் கட்டி மேலே கோர்த்திருந்தது. என் காலின் கீழிருந்த பலகையை அப்பு தட்டியவுடன், என் உடல் கீழே விழ, நான் மரணாவஸ்தையிருப்பதுபோல கால்களை உதறிக் கொண்டிருக்கும் பொழுது, நாடகம் பார்க்க வந்தவர்களுக்குள் வாஸ்தவத்தில் ஏதோ விபத்து நேரிட்டதென ஒரு பெரிய ஆரவாரம் உண்டாக, எங்கள் சபையில் ஓர் அங்கத்தினராயிருந்த, ஹாலில் உட்கார்ந்திருந்த டாக்டர் ராமாராவ் என்பவர் ஓடிவந்து, மேடையின் மீது குதித்தேறி, என் உடம்பை அப்படியே தாங்கிக் கொண்டார்! புஷ்பவர்மன் வேஷம் பூண்டு, அம்பினை எய்து என்னைக் காப்பாற்ற வேண்டிய எனது நண்பர் ரங்கசாமி ஐயங்கார், அம்பெய்வதை விட்டு, தானும் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டார்!

மேடையிலிருந்த எனது ஆக்டர்களெல்லாம் ஏதோ கெடுதி நேரிட்டதென என்னைச் சூழ்ந்தனர்! உடனே எங்கள் கண்டக்டர் திருமலைப்பிள்ளை டிராப் படுதாவை விட்டுவிட்டு அவரும் ஓடி வந்தார். என்னடா இதெல்லாம் என்று கண் விழித்துப் பார்த்தேன்! (அக்காட்சியில் நான் அந்தகனாக நடிக்க வேண்டியிருந்ததை, இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கவனிப்பார்களாக!) அப்பொழுது என் மார்பின்மீது ரத்தம்