பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

நாடக மேடை நினைவுகள்


துளித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். இதற்குக் காரணம் என் உடலைத் தாங்குவதற்காகக் கட்டியிருந்த பித்தளைக் கம்பிகளில் ஒன்று என் காதிலணிந்திருந்த கடுக்கனில் மாட்டிக் கொண்டு இழுக்க, என் காது சிறிது அறுந்ததென்பதைக் கண்டேன். இத்தனை வருஷங்களாகியும் அந்த வடுவிற் சிறிது என் இடது காதை விட்டகலவில்லை .

இந்த சத்ருஜித் நாடகமானது எங்கள் சபையோரால் இன்னும் ஒருமுறைதான் ஆடப்பட்டது. அப்படி ஆடியது 1898 டிசம்பர் மாதம் 25ஆம் தேதி. அச்சமயம், அ. கிருஷ்ண சாமி ஐயர் இந்திரசேனையாக நடித்தார். நித்யாநந்தன் பாகம் ஆர். ஸ்ரீனிவாசராவ் என்பவரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. கிருஷ்ணசாமி ஐயர், வழக்கம்போல் மிகவும் நன்றாய் நடித்துப் பாடினார். சென்ற 34 வருஷங்களாக இந்நாடகம் எங்கள் சபையோரால் ஆடப்படாததற்கு, இதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை. நான் கண்டக்டராயிருந்த வரையில் ஆடாததற்குக் காரணம் எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு இதை ஆட மறுபடியும் பிரியப்படாததேயாம். இதர கம்பெனிகளாலும் சபைகளாலும் இது சுமார் பதினாறு தடவைதான் இதுவரையில் ஆடப்பட்டது. இதற்கு ஒரு காரணம், இந்நாடகமானது ஆடுவதற்குக் கொஞ்சம் கடினமானது என்பதாயிருக்கலாம். ஆயினும் கூடியவரை, கவர்ன்மென்ட் ஆபீசர்கள் பார்டி, சென்ற வருஷம் இதை மிகவும் விமரிசையாக நடத்தி இருக்கின்றனர். இவ்வருஷம் இதை எங்கள் சபையில் ஆட வேண்டுமென்று எங்கள் தமிழ்க் கண்டக்டர் தெரிவித்திருக்கிறார்; மதுரை டிராமாடிக் கிளப்பாரும் இதை இவ் வருஷம் ஆடினர். அச்சமயம் எனதுயிர் நண்பர் நாகரத்தினமும் நானும் முக்கிய பாகங்களை அங்குச் சென்று எடுத்துக்கொண்டோம்.

1897ஆம் வருஷம் டிசம்பர் மாசம் எங்கள் சபை மறு படியும் பெங்களூருக்குப் போய் 3 நாடகங்கள் ஆடியது. 35 அங்கத்தினர் இங்கிருந்து டிசம்பர் மாசம் 24ஆம் தேதி புறப்பட்டுப்போய், 1898ஆம் வருஷம் ஜனவரி மாசம் 2 ஆம் தேதி திரும்பி வந்தோம். இம்முறை தெலுங்கு நாடகம் ஒன்றும் ஆட வேண்டுமென்று தெலுங்கு ஆக்டர்களையும் அழைத்துக் கொண்டு போக ஏற்பாடு செய்தபடியால்,