பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

நாடக மேடை நினைவுகள்




இவ்வருஷம் நான் புதிய நாடகமொன்றும் எழுதவில்லை. அதற்கு முக்கியக் காரணம் நான் இவ்வருஷம் ஹைகோர்ட்டு வக்கீலாக ஆனதே என்று நினைக்கிறேன்; கோர்ட்டு விஷயங்களெல்லாம் புதிதாய்க் கவனிக்க வேண்டியிருந்தபடியால் எனக்கு நாடகம் எழுத அதிக சாவகாசமில்லாமற் போயிற்று.

இதற்கப்புறம் நான் எழுதிய நாடகம் “காலவ ரிஷி” என்பதாம். இந்த நாடகத்தை நான் 1899 ஆம் வருஷம் முதலில் ஆரம்பித்து, சீக்கிரம் எழுதி முடிக்க, இது எங்கள் சபையோரால் மார்ச்சு மாதம் ஆடப்பட்டது. நான் இப் புராணக் கதையை நாடக ரூபமாக எழுதியதற்கு ஒருவிதத்தில் காரண பூதமா யிருந்தவர் எனது நண்பர் ஸ்ரீமான் அ. கிருஷ்ணசாமி ஐயர் என்றே சொல்லவேண்டும். அவர் இக்கதையை ஒருவாறு எழுதி என்னிடம் கொண்டு வந்து காண்பித்தார். அதை நான் படித்துப் பார்த்து கதை நன்றாகத்தானிருந்தது; நாடகமாக எழுதியது அவ்வளவு நன்றாக இல்லை; நீ இந்நாடகத்தில் ஆடவேண்டுமென்று விருப்பமிருந்தால் சொல், நான் எனக்குத் தெரிந்த வரை ஒழுங்காக நாடக ரூபமாக எழுதித் தருகிறேன் என்று கூற, அவர் அதற்கு இசையவே, “காலவரிஷி’ என்று பெயரிட்டு இந்நாடகத்தை எழுதினேன். கிருஷ்ணசாமி ஐயர் விருப்பத்தின்படியே இதில் கதாநாயகியாகிய சந்தியாவளியின் பாகத்தை அவருக்குக் கொடுத்தேன். எம். சுந்தரேசய்யர் பி.ஏ. என்பவர் தமிழ் நாடகமொன்றில் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்று கேட்க, அவருக்கு சித்ரசேனன் பாத்திரம் கொடுத்தேன். அவருடைய தம்பி ராமநாத ஐயருக்கு சித்ரசேனனது மற்றொரு மனைவியாகிய ரத்னாவளியின் பாகம் கொடுக்கப்பட்டது. நான் நாரதர் வேடம் எடுத்துக்கொண்டேன். எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுவுக்கு, அவருக்குத் தக்கபடி எழுதிய சுபத்திரையின் பாகம் கொடுத்தேன். அவர் என்னுடனன்றி மற்றொருவனுடனும் மேடையின்மீது நடிக்க முடியாது என்கிற தீர்மானம் கொண்டிருந்தபடியால், நான் இந்நாடகத்தில் கடைசி இரண்டு காட்சிகளில் அர்ஜுனனாக வரும்படி நேர்ந்தது. ஒரு நாடகத்தில் ஒருவன் இரண்டு பாத்திரங்கள் பூணுவது தவறெனத் தெரிந்து, இதற்குப் பிறகெல்லாம், இந்நாடகம் எங்கள் சபையில் நடிக்கப்பட்ட பொழுது நான் பன்முறை அர்ஜுனன் வேடம் ஒன்றையே பூண்டேன். ஸ்ரீ கிருஷ்ண வேஷம் கே. ஸ்ரீனிவாஸனுக்குக் கொடுக்கப்பட்டது.