பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

251





நாடகம் நடிக்கப்பட்டபொழுது, எம் சுந்தரேச ஐயர் சித்திரசேனன் பாகத்தில் விமரிசையாகத்தான் நடித்தார். இவருக்கும் சங்கீதத்திற்கும் வெகுதூரம். ஆகவே இவர் ஒரு பாட்டும் பாடாவிட்டாலும் வசனத்தில் நன்றாய் நடித்தார். இவரை ஒத்திகை செய்வதில் எனக்கு நேரிட்ட முக்கியமான கஷ்டம் என்னவென்றால், இவருடைய ஆங்கிலேய உச்சரிப்பை மாற்ற நேரிட்டதே; இவர் அநேக வருஷங்களாகக் கிறிஸ்தவ கலாசாலையில், ஷேக்ஸ்பியர் மகாகவியின் நாடகங்களில் ஆங்கிலத்தில் நடித்துப் பழக்கப்பட்டவர்; அன்றியும் ஆங்கில பாஷையில் பேசுவதில் நிபுணர்; இவரது உச்சரிப் பெல்லாம் ஆங்கில பாஷைக்குரிய உச்சரிப்பாயிருக்கும். “கள்வர் தலைவன்” என்னும் நாடகம் இரண்டாம் முறை நாங்கள் போட்டபொழுது, இவருக்கு சௌரியகுமாரன் பாகம் கொடுத்திருந்தேன்; அதன் முதல் ஒத்திகையில் இவர் பேசவேண்டிய “பலாயனனுக்கு நாம் கொடுத்தது (மருந்து) போதுமா போதாதா?” என்னும் வார்த்தைகளை இவர் ஆங்கில உச்சரிப்புடன் வெள்ளைக்காரன் தமிழ் பேசுவது போல் பேசியதை, இப்பொழுது நினைத்துக்கொண்டாலும் எனக்கு நகைப்பு வருகிறது. இதை அவரைப்போல நான் சொல்லிக் காட்டும்பொழுதெல்லாம், எனது நண்பர்கள் நகைப்பார்கள். இந்த ஆங்கிலேய உச்சரிப்பை மாற்றுவதற்கு நான் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. ஆயினும் முடிவில் அதை முற்றிலும் ஒழித்தேன் என்றே நான் சொல்ல வேண்டும்.

சந்தியாவளியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் நன்றாகப் பாடி நடித்தார் என்பதற்கு ஐயமில்லை. இதனால் இவருடன், இவரது சக்களத்தியாக வரவேண்டிய எம். ராமநாத ஐயருக்கு ஒரு பெருங் கஷ்டமாயிற்று. எல்லாக் காட்சிகளிலும் ஏறக்குறைய இருவரும் ஒன்றாய் வர வேண்டியிருந்தது; ஆகவே ஒத்திகை நடக்குங்கால், ஒரு காட்சியில், கிருஷ்ணசாமி ஐயர் பாடும் பொழுதெல்லாம் இவர் சும்மா நின்று கொண்டிருப்பதென்றால், இவருக்குக் கஷ்டமாயிருந்தது. இவர் மெல்ல என்னிடம் வந்து “என்ன சம்பந்தம், எனக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறதே. கிருஷ்ணசாமி பாடும் பொழு தெல்லாம் நான் பக்கத்தில் மரம்போல் நின்று கொண்டிருந்தால், எல்லோரும் என்னைப் பார்த்து தகைக்கிறார்களே, இதற் கென்ன செய்வது?” என்று கேட்டார்.