பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

நாடக மேடை நினைவுகள்





கல்யாணத்தை ஒரு நாடகமாக எழுத வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்த நான், அதை எழுதுவதிற் பிரயோஜனமில்லை; புருஷோத்தமனான, ஸ்ரீ ராமருடைய பாத்திரத்தை யாரால் சரியாக நடிக்க முடியும் என்று விட்டு விட்டேன். அந்நாள் முதல் இது வரையில் எனது நண்பர்களில் அநேகர் ராமாயணத்தை நாடக ரூபமாக எழுத வேண்டுமென்று பன்முறை கேட்டும், அவர்கள் வேண்டுகோளுக்கு நான் இசையாததற்கு இதுதான் காரணம். சீதா கல்யாணத்தை எழுதுவதைவிட, சீதா தேவியின்சுயம் வரக் காட்சியைப்போல வேறொரு சுயம்வரம் எழுதலாமெனத் தோன்றியது. அதன்பேரில், அதையே முக்கியமான காட்சியாக வைத்துக் கொண்டு, “நற்குல தெய்வம்” என்னும் நாடகத்தை எழுதி முடித்தேன். முதன் முறை இதை எங்கள் சபையார் நடித்தபொழுது இப்பொழுது இந்நாடகத்துடன் ஆடப்படும் இடைக் காட்சிகள் சேர்க்கப்படவில்லை. சபை தினக் கொண்டாட்டத்திற்காக அனைவரையும் வரவழைத்து, டிக்கட்டு இல்லாமல் ஆடிய நாடகமாகையால் சிறியதாயிருந்தாலும் தவறில்லை என்று அப்படியே ஆடினோம்.

பிறகு இதையே டிக்கட்டுகளுடைய நாடகமாக நடிக்க வேண்டுமென்று தீர்மானித்தபோது அவ்வளவு சிறியதாயிருந் தால் உதவாது, கொஞ்சம் பெரிதாக ஆக்க வேண்டுமென்று தீர்மானித்து, மூன்று இடைக் காட்சிகளும் இத்துடன் சேர்த்து ஆடினோம். இவ்விடைக் காட்சிகள், நான் அச்சிட்டிருக்கும் பிரஹசனங்களுள் “கண்டுபிடித்தல்” என்னும் பிரஹசனமாக அச்சிடப்பட்டிருக்கிறது. இச் சிறு நாடகம் அன்று ஆடப்பட்ட பொழுது, வித்யா வினோதி ராவ்பகதூர் பி. அனந்தாசார்லு இந் நாடகத்தைப்பற்றியும் எங்கள் சபையைப்பற்றியும் மிகவும் சிலாகித்துப் பேசினார். நாடகம் நன்றாயிருந்ததென்பதற்கு அத்தாட்சியாக, வந்திருந்தவர்களில் பலர் சபையில் அங்கத்தினராகச் சீக்கிரம் சேர்ந்தனர். இது எனது இளைய நண்பர்கள் கஷ்டமில்லாதபடி ஆடக்கூடிய நாடகம். பள்ளிக் கூட வருஷோற்சவங்களில் இதை எளிதில் ஆடலாமெனத் தோன்றுகிறது.

இவ் வருஷம் எங்கள் சபையின் நண்பர்களுள் சிலர் அ. கிருஷ்ணசாமி ஐயர், சி. ரங்கவடிவேலு, ராஜகணபதி முதலியார், எம். வை. ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்களுக்கும், எனக்கும் பொற் பதக்கங்கள் பரிசாக அளித்தனர். இதை