பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

255




எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஒரு பெருமையாக எடுத்துக் கூற வரவில்லை; இதனால் நேரிட்ட ஒரு கெடுதியை உரைக்கவே இதை எழுதலானேன். மேற்சொன்னபடி சிலருக்கு இவ்வாறு பொற் பதக்கங்கள் அளிக்கப்படவே, மற்றவர்களுக்கு மனஸ்தாபமுண்டாகி, சபையில் கலகம் பிறந்து குழப்பமாய் முடிந்தது. ஆக்டர்களுக்குள் இப்படிப் பிறந்த மனஸ்தாபனத்தை அகற்ற நாங்கள் எல்லோரும் வெகுபாடு பட வேண்டியதாயிற்று. அதன் பிறகு, இனி நாடக மேடையில் எங்கள் சபையில் ஒரு ஆக்டருக்கும் யாரும் பரிசளிக்கலாகா தென்றும், அப்படி யாராவது அளிக்க முயன்றாலும் ஆக்டர்கள் பெறக்கூடாதென்றும் ஒரு நிபந்தனை செய்து கொண்ட பிறகே இந்த மனஸ்தாபம் அடங்கியது. ஆகவே ஜீவனோபாயமாக நாடகமாடுபவர்கள் இவ்வாறு பொற்பதக்கங்கள் பெறுவது தவறென்று நான் சொல்லவில்லை. அஃதன்றி வேடிக்கை யார்த்தமாக நாடக சபையின் அபிவிருத்திக்காக நடிக்கும் அமெடூர்ஸ் (amateurs) அரங்க மேடையில் பரிசு பெறுவது எப்பொழுதும் மற்ற ஆக்டர்களுக்கு மனஸ்தாபம் உண்டு பண்ணுமாதலால், இதை வாசிக்கும் நாடகமாடவிரும்பும் எனது இளைய நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. மேற்சொன்ன நிபந்தனையானது எங்கள் சபையில் இதுவரையில் மிகவும் ஜாக்கிரதையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிபந்தனையை மேற்கொள்ளாது நடந்த அநேகம் சபைகள், இதனாலுண்டான மாச்சரியத்தினால் கலைந்து போனதை நான் அறிந்திருக்கிறேன்.

1900ஆம் வருஷம் எங்கள் சபையானது கொஞ்சம் நித்ரா வஸ்தையிலிருந்ததென்றே சொல்ல வேண்டும். லீலாவதிசுலோசனா, இரண்டு நண்பர்கள் என்னும் இரண்டு பழைய தமிழ் நாடகங்களை ஆடியதன்றிப் புதிதாய் ஒன்றும் ஆடவில்லை . தெலுங்கில் மாத்திரம், ஊ. முத்துக்குமாரசாமி செட்டியார் எழுதிய “சுபத்ரார்ஜுனா” என்னும் நாடகம் ஆடப்பட்டது. இப்படி உற்சாகக் குறைவுடன் இருந்ததன் பலன் என்னவென்றால் எங்கள் சபையின் வரும்படியும் குறைந்ததேயாம். இவ்வருஷம் ஜூன் மாதம் எங்கள் கையிருப்பு ரூ.51-9-7 தான். எந்த விஷயத்திலும் சிரத்தை குறைந்தால் வருவாயும் குறையும்.

இதன் பிறகு 1901ஆம் வருஷம் முதலில் நான் “மார்க்கண்டேயர்” என்னும் நாடகத்தை எழுதினேன். இதை