பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

நாடக மேடை நினைவுகள்




எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுக்காக எழுதினேன். இச்சமயம் எங்கள் சபையில் பிடில் வாசித்துக்கொண்டிருந்தவர், சோமுராவ்; இந்தச் சோமு ராவ், சிறு வயதில் நாடகக் கம்பெனியில் ஆக்டராயிருந்து, மார்க்கண்டேயர் வேடத்திலும், குறத்தி வேடத்திலும் பெயர் பெற்றவர்; அக்காலத்திலெல்லாம் சோமுராவ் குறத்தியாகவோ, மார்க்கண்டேயராகவோ மேடைமீது வருகிறார் என்றால், ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் நாடகம் பார்க்கப் போவார்களாம்; இதைப்பற்றி என் தந்தை எனக்குச் சொல்லியிருந்தார்; இவர் பெயரை நாடக விளம்பரங்களில் “ஜகன்மோகனசபா ரஞ்சித சுகசாரீர சோமு ராவ்” என்று அச்சிடுவார்களாம்; குறத்தியாக வந்து, “சுந்தரமாய் சுகிர்த குற வஞ்சி வந்தாள்!” என்னும் பாட்டை, ஒரு மணி நேரம் பாடி நடிப்பாராம்; இப்படிப்பட்டவர் வயது மேலிட்டமையால் நாடகமாடுவதை விட்டு, பிடில் வாசிக்க எங்கள் சபைக்கு 1895ஆம் வருஷம் வந்து சேர்ந்தார். இவரை எங்கள் சபைக்குச் சிபாரிசு செய்தது சி. ரங்கவடிவேலு. அதுமுதல் எங்கள் சபையில் பக்க வாத்தியக்காரராகப் பிடில் வாசித்துக்கொண்டிருந்தார். சென்ற 1930ஆம் வருஷம்தான் முதுமை மேலிட்டபடியால் எங்கள் சபையை விட்டு விலகினார். இந்த 35 வருஷங்களாக விடாது எங்கள் சபையில் ஊழியஞ் செய்ததற்காக, இவருக்கு மாசம் பென்ஷன் கொடுத்து வருகிறோம். இந்த சோமு ராவ் எனதாருயிர் நண்பருக்கு மார்க்கண்டேயர் நாடகத்துப் பாட்டுகளை யெல்லாம் கற்பித்தார். அப்படிக் கற்ற எனது நண்பர், அந்த நாடகத்தை நான் எழுத, அதில் தான் மார்க்கண்டனாக நடிக்க இஷ்டமிருப்பதாகத் தெரிவிக்க, உடனே அதற்கிசைந்து அந்நாடகத்தை நான் விரைவில் எழுதி முடித்தேன். இந்நாடகம் இவ்வருஷம் சிவராத்திரி தினம் ஆடப்பட்டது. அ. கிருஷ்ணசாமி ஐயர் மருத்துவதியாகவும் சி. ரங்கவடிவேலு மார்க்கண்டனாகவும் மிகவும் நன்றாய் நடித்தார்கள். எனக்கு ஞாபகமிருக்கும் வரையில் நான் சித்ரகுப்தனாக நடித்தேன் என எண்ணுகிறேன்.

இம் மார்க்கண்டேயர் நாடகம் பிறகு எங்கள் சபையில் சில முறைதான் நடிக்கப்பட்டது. ஆயினும் இதர சபையோர்களால் பன்முறை நடிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாகப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் சபைகளால்; இதற்குக் காரணம், இதில் ஸ்திரீ வேஷங்கள் அதிகமர்யில்லாதபடியால் என்று