பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

நாடக மேடை நினைவுகள்


நடித்தது போல இதுவரையில் யாரும் நடிக்கவில்லையென்று உறுதியாய்க்கூறுவேன். இதை நான் இவ்வளவு சவிஸ்தாரமாக எழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. அதாவது, நாடக மேடையில் தாம் நடிக்க வேண்டுமென்று விருப்பமுள்ளவர்கள், லஜ்ஜையைவிட்டு. ஊக்கமுடையவர்களாய் முயற்சி செய்வார்களாயின் எப்படியும் சாதிக்கலாம் என்பதை எனது நண்பர்கள் அறியும் பொருட்டேயாம். சொல்லிக் கொடுப்பவன் புதிதாய் வரும் ஆக்டரை, “இதென்ன இப்படி ஆபாசமாய் நடிக்கிறாயே,” என்று இகழாது, கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகப்படுத்திக் கொண்டு வருவாராயின் நலமாம் என்பது என் துணிபு. இதை நான் எப்பொழுதும் மறவாதவனாய், புதிய ஆக்டர்கள் என்னுடன் மேடையின் பேரில் யாராவது வந்தால், அப்போதைக்கப்போது அவர்களுக்கு சபையில் வந்திருப்பவர்கள் அறியாதபடி, ஏதோ பை பிளே (Bye-play) நடப்பது போல், அவர்களுக்குத் தைரியம் சொல்லி, உற்சாகப்படுத்துவது என் வழக்கம். இதனால் எனது புதிய நண்பர்கள் பயன்பெற்றதாகப் பன்முறை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாடகத்திற்கு கண்டக்டர்களாயிருப்பவர்களும், பழைய ஆக்டர்களும் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. நான் பிரத்தியட்சமாய்ப் பார்த்திருக்கிறேன்; புதிய ஆக்டர்கள் ஏதாவது மேடையின்பேரில் நாடகம் நடிக்கும் பொழுது, தவறு இழைத்து விட்டால் “என்ன இப்படிச் செய்து விட்டாயே! உன்னால் எல்லாம் கெட்டுப் போய் விட்டதே!” என்று அவர்கள் மீது ‘சள்’ என்று வீழ்வதை; அதனால் முன்பே பயந்திருக்கும் ஆக்டர், இருக்கும் கொஞ்சம்தைரியமும் போய், பிறகு நாடகம் முடியும்வரையில், தன் பாகத்தை யெல்லாம் மறந்து ரசாபாசம் செய்ததைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன்! ஆகவே கண்டக்டர்கள் என் சொந்த அனுபவத்தை கொஞ்சம் கவனித்து நடக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். குற்றம் செய்வது யார்க்கும் சகஜமாம். அதிலும் புதிய ஆக்டர்கள் அதிகக் குற்றம் செய்யக்கூடும். அப்படிச் செய்தபோதிலும், நாடகம் நடக்கும் பொழுதே மேடையின்மீது பலர் அறிய அதைக் கண்டிக்காமல், நாடகம் முடிந்தவுடன், மெல்ல அவர்களை ஒருபுறமாக அழைத்துக் கொண்டு போய், இப்படிச் செய்வது சரியல்ல; இப்படிச் செய்ய வேண்டும் என்று நல்வார்த்தை கூறி அவர்களைத் திருப்புவதே நலமெனத் தோன்றுகிறது. மேற்சொன்ன சுதர்சனாச்சாரியார், சில வருஷங்களுக்கெல்லாம் எங்கள் சபையைவிட்டு நீங்கி