பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

275


“பேயல்ல பெண்மணியே’ என்று பெயர் வைத்தேன். இந்நாடகத்தின் கதை மிகவும் சிறியதாயிருந்தபடியால், ஏறக்குறைய ஒரு நாடகம் மூன்று மணி நேரமாவது பிடிக்கா விட்டால் பணம் கொடுத்து அதைப் பார்க்க வரும் ஜனங்கள் அதிருப்தியடைவார்கள் என்று, தெருக்கூத்து ஆடுபவர்களுடைய கிளைக்கதை யொன்றையும் இதனுடன் சேர்த்து எழுதினேன். இவ்வாறு நான் செய்ததற்கு உலகெங்கும் பிரசித்தி பெற்ற ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் அனுமதியே இருக்கின்றது. அவர் “மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம்” (Mid Summer Night's Dream) என்னும் ஒரு நாடகத்தில் ஆதன்ஸ் நகரத்தின் கூத்தாடிகளுடைய கதையையும் புனைந்து எழுதியிருக்கிறார்; அம்மாதியாகவே கதாநாயகனும் நாயகியும் வசித்திருந்த ஊரிலுள்ள தெருக் கூத்தாடிகள், அங்குள்ள காளி கோயிலின் உற்சவத்தில், அவ்வூர் வழக்கப்படி நாடகமாட ஒத்திகை நடத்தும் கதையை இந்நாடகத்தின் முக்கியக் கதையுடன் புனைந்து எழுதினேன். இந்நாடகத்தில் ஒரு விசேஷமென்ன வென்றால், ஒரு வேஷதாரிக்காவது சம்கி முதலிய விலையுயர்ந்த உடுப்புக் கிடையாது. சாதாரணமாக நாடக மென்றால், ராஜா வேஷம், ‘மந்திரி வேஷம்’ அரசி வேஷம் முதலியன இருக்கவேண்டுமென்பது நமது நாட்டிலுள்ளார் கொள்கையல்லவா? அம்மாதிரியான பாத்திரங்கள் ஒன்றுமின்றி, சாதாரண ஜனங்களின் நடவடிக்கையை நாடகமாக ஆடினால் நன்றாயிராது என்று பெரும்பாலும் அக்காலம் எண்ணப்பட்டது. இது தவரென்று நிரூபிப்பதற்காக இந்நாடகத்தில் வரும் பாத்திரங்களெல்லாம் பெரும்பாலும் சாதாரண ஜனங்களாகவே யமைத்து இந்நாடத்தை எழுதி முடித்தேன். இதில் ஓர் அரசன் மாத்திரம் வந்தபோதிலும், அவ்வரசனும் மாறு வேடத்தில் தேச சஞ்சாரம் செய்வதாக அமைத்து அப்பாத்திரத்தையும் சாதாரண உடையில் வரும்படி செய்தேன். இந்நாடகத்தை நாங்கள் ஒத்திகை செய்த பொழுது, இதைப் பார்த்த பல அங்கத்தினர், இது நன்றாயிருக்குமா எனச் சந்தேகித்தனர். நாடகத் தினத்தில் மேடையின் பேரில் இது ஆடப்பட்டு, வந்திருந்த சபையோர்கள் நன்றாயிருந்ததென அங்கீகரித்த பிறகுதான், அவர்கள் திருப்தியடைந்தனர். ஒருவிதத்தில் இதை ஜன் சமூக நாடகம் (Social Drama) என்றே நான் சொல்லவேண்டும். ஆயினும் இது தற்கால ஜனசமூகக் கதையன்று; பழைய காலத்திய கதையாகும். ஆயினும் இது நன்றாயிருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக் கொண்டதுதான்,