பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

277


எல்லோருக்கும் இடைவிடா நகைப்பாயிருந்தது; இப்பொழுதும் இவருக்கு என்னைப்போல் 59 வயதுக்கு மேலாகியும், இந்தத் தெருக்கூத்து அர்ஜுனன் வேடத்தில் இவரைப் போல் நடிக்கத்தக்கவர்கள் இல்லையென்றே நான் சொல்ல வேண்டும். இவரைப்பற்றி நாராயணசாமிப் பிள்ளை என்று கூறினால், யாருக்காவது தெரியாவிட்டால், “யார் அது, தெருக் கூத்து அருச்சுனனா?” என்று கேட்பார்கள்.


இவ்வருஷம் நான் புதிதாய் எழுதிய மற்றொரு நாடகம் “வாணீபுர வணிகன்” என்பது. இது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய மர்ச்சென்ட் ஆப் வெனி (Merchant of Venice) என்பதன் தமிழ் அமைப்பாம். இது அந்நாடகக் கவி எழுதிய நாடகங்களில் ஒரு சிறந்ததாய், தற்காலத்தில் இங்கிலாந்திலும், ஜர்மனியிலும் பன்முறை ஆடப்படுகிறது. “ஆஸ் யூ லைக் இட்” டில் செய்தபடியே இதிலும் பெயர் களையும் ஊர்கள் முதலியவைகளையும் மாற்றி எழுதினேன். இந் நாடகம் இவ் வருஷம் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. இதில் முக்கியமான பாத்திரம் ஷாம்லால் (Shylock) ஆக இருந்தபோதிலும் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு சரோஜினி வேடம் பூண்டபடியால், நான் பானுசேனன் வேடம் எடுத்துக் கொண்டேன். ஷாம்லாலின் பாகம் எம். சுந்தரேசையரால் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்ட தென்று சபிகர்கள் புகழ்ந்தனர். இதில் இவ்வருடம்தான் எங்கள் சபையை சேர்ந்த என் தமயனார் ஏகாம்பர முதலியார் வாணீபுர அரசனாக வேடம் பூண்டார். எங்கள் சபையில் இதுவே அவர் பூண்ட முதல் வேஷமும் கடைசி வேஷமுமாம். இந்நாடகத்தில் தான் அது வரையில் எங்கள் சபையில் சங்கீதத்தில் நல்ல பெயர் பெற்றிருந்த என் பழைய நண்பர் எம். வை. ரங்கசாமி ஐயங்கார் எங்கள் சபையில் கடைசி முறை, அருகபுரத்தரசனாகத் தோன்றினார். இவர் இதற்கப்புறம் கொஞ்ச நாளைக்குள் எங்கள் சபை செய்த தௌர்ப்பாக்கியத்தால் காலகதி அடைந்தனர். இதில், டபிள்யூ துரைசாமி ஐயங்கார் லீலாதரனாகவும், அ. கிருஷ்ணாசாமி ஐயர் ஜலஜாவாகவும் ஆக்டுசெய்தார்கள். ஹாஸ்ய பாகத்தில் ராஜகணபதி முதலியார் லாவண்ய கபீரனாகவும், ஆர். ஸ்ரீனிவாசராவ் என்பவர் கிழ கபீரனாகவும் வேடம் பூண்டு சபையோரைக் களிக்கச் செய்தனர். நீலகேசி வேடம், எஸ். பத்மனாபராவ் பூண்டனர்.