பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

நாடக மேடை நினைவுகள்


கூலிக்கு வாங்கிக் கொண்டோம். இவ்வாறு “சிறுகக்கட்டி பெருக வாழ்” என்னும் பழமொழியின்படி கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் சபையை விருத்தி செய்தோம். இவ்வாறு வரவுக்குத் தக்கபடி செலவு செய்துகொண்டு, வரவு அதிகமாக ஆக செலவையும் அதிகப்படுத்திக் கொண்டு வந்தபடியால் தான், இதர சபைகள் அழிந்ததுபோல் அழியாமல் எங்கள் சபை நீடித்திருக்கின்றது என்று உறுதியாய் நம்புகிறேன். இச் சந்தர்ப்பத்தில் என் அருமைத் தந்தையார் எங்களுக்குக் கூறிய ஒரு புத்திமதி எனக்கு ஞாபகம் வருகிறது. அதாவது ஒருவனுக்கு நூறு ரூபாய் மாதம் வரும்படியிருந்தால். அதில் 99 ரூபாய் 15 அணா பதினொருபை, அவன் செலவழிப்பானாயினும் அவன் சுகியாவான்; நூறு ரூபாய்க்குமேல் ஒரு தம்பிடி அதிகமாகச் செலவழித்து அவன் கடன்காரனாவானாகில், அவன் துக்கத்திற்கிடங் கொடுப்பவனே என்று பன்முறை எங்களுக்குக் கூறியுள்ளார். அதைக் கடைப்பிடித்து நாங்கள் இதுவரையில் எங்கள் சபையைப் பாதுகாத்து வந்திருக்கிறோம். இனிமேலும் எங்கள் சபையார் இப்புத்திமதிப்படி நடப்பார்களாக. வரவுக்கு மிஞ்சி செலவு செய்ய விரும்பும் எனது இளைய நண்பர்கள் இதைக் கொஞ்சம் முக்கியமாகக் கவனிப்பார்களாக!


பதினேழாம் அத்தியாயம்


1904ஆம் வருஷம் எங்கள் சபையார் சாரங்கதரா நாடகத்தை மறுமுறை நடத்தி, அதில் வந்த வரும்படியில் செலவு போக சென்னைபுரி அன்னதான சமாஜத்தாருக்கு ரூபாய் 250 கொடுத்தார்கள். இந்த மூலதனத்தைக் கொண்டு வருஷா வருஷம் ஒரு தினம் அன்னதான சமாஜத்தார் நூறு ஏழைகளுக்குச் சபையின் பேரால் அன்னமளிக்கின்றார். இந்த விஷயம், எங்கள் சபை அங்கத்தினருக்கே அநேகம் பெயருக்குத் தெரியாதாகையால், இதை இங்கு எடுத்தெழுதலானேன்.

இந்த 1904ஆம் வருஷம் நடந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்கள் சபையார் மைலாப்பூர் கிளப் தோட்டத்தில், ‘விரும்பிய விதமே’ என்னும் எனது நாடகத்தை நடத்தியதேயாம். இது அனேக விதத்தில் ஒரு