பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

281


 முக்கியமான சம்பவமாகையால் இதைப்பற்றிச் சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.

இந்நாடகம் இவ் வருஷம் டிசம்பர் மாசம் 27ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் வரும்படியை மைலாப்பூரில் முன்பு கட்டியிருந்த ரானடே ஹால் (Ranade Hall) என்னும் கட்டடத்திற்காகக் கொடுத்தோம். இச்சமயம் ரானடே புஸ்தக சாலைக்குக் காரியதரிசியாக, வக்கீலாயிருந்து பிறகு சப் ஜட்ஜாகிய பாலசுப்பிரமணிய ஐயர் என்பவர் இருந்தார். இவர் அக்கட்டடத்தைப் பூர்த்தி செய்வதற்குப் பணம் கொஞ்சம் போதாமையாயிருந்தபடியால், எங்கள் சபை அதற்காக ஒரு நாடகம் மைலாப்பூரில் நடத்தி, வரும்படியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவே, அவர் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். நாங்கள் தீர்மானித்த நாடகமாகிய “விரும்பிய விதமே” என்பதை ஒரு தோட்டத்தில் போட்டால் நன்றாயிருக்குமெனக் கூறினேன். இதற்கு முன்பாக “லார்ட் வென்லாக்” (Lord Wenlock) சென்னை கவர்னராக இருந்த பொழுது, ஒருமுறை, கவர்ன்மெண்ட் ஹவுஸ் தோட்டத்தில், ஆங்கிலத்தில் இந்நாடகம் நடிக்கப்பெற்றதை நான் பார்த்திருந்தேன். அது மிகவும் நன்றாயிருந்ததெனக் கண்டறிந்தவனாய் இந்நாடத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தோட்டத்தில் நடித்தால் நன்றாயிருக்குமென்றே இதைத்தமிழில் எழுதினேன்.

இக்கதையின் முதல் அங்கம் தவிர மற்ற நான்கு அங்கங்களும் ஒரு காட்டிலே நடந்தேறுகின்றன; முதல் அங்கத்தின் காட்சிகளையும் ஒரு தோட்டத்தில் நடத்திக் காட்டலாம். ஆகவே, பாலசுப்பிரமணிய ஐயர், மைலாப்பூர் கிளப்பின் பின்பக்கமிருக்கும் ஒரு சிறு தோட்டத்தில் இதற்காக இரண்டு பெரிய மரங்களின் மத்தியில் சிறு மேடை எழுப்பிதக்க ஏற்பாடு செய்தார். தென்புறத்தில் ஒரு குகையிலிருந்து ஒரு வழி வருவது போலும் ஏற்பாடு செய்தார். வேஷதாரிகள் வேஷம் பூண, அதற்குப் பின்புறமாகத் தென்னங்கீற்றுகளினால், ஒரு சிறு விடுதி ஏற்படுத்தினார். பனிக்காலமாகையால் நாடகம் பார்க்க வரும் ஜனங்களின் சௌகர்யத்திற்காக எதிரில் ஒரு பெரிய. பந்தலைப் போட்டு வைத்தார். இவ்வாறு நாடகம் நடத்துவதற்காக எல்லா சௌகர்யங்களையும் செய்து விட்டு, நாடகத்திற்காக ஒரு தினம் குறித்து டிக்கட்டுகளையும் ஏராளமாகத் தனக்குத் தெரிந்தவர்களுக்குள் விற்றனர். எல்லாம்