பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

நாடக மேடை நினைவுகள்


சித்தமான பிறகு, தெய்வானுகூலமில்லாமற் போயிற்று! இந்நாடகத்தில் ஒரு முக்கிய ஸ்திரீவேஷம் தரிக்க வேண்டிய சி. ரங்கவடிவேலுவின் தாயார், இதற்கு முன் கொஞ்ச காலமாகப் பாரிச வாயுவினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்; மரணகாலம் கிட்டியது. வைத்தியர்கள் அவர்களது நிர்யணகாலம் இன்றோ நாளையோ என்று கைவிட்டனர். எப்படியாவது நாடகத்தினம் தள்ளிவிடுமென்று கோரி ஆக்டர்களெல்லாம் சித்தமாயிருந்தோம். எனதாருயிர் நண்பர் தன் மனோவருத்தத்தையும் பாராமல், சபையின் பெயருக்காகத் தான் ராஜீவாட்சியின் (Rosalind) பாகத்தை ஆட ஒப்புக்கொண்டார். நாடக மேடையில் விளக்குகளும் ஏற்றி ஆக்டர்களெல்லாம் வேஷம் போட்டுக் கொள்ளுமுன், ராத்திரி நாடகமாகையால் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வேஷம் தரிக்க வேண்டுமென்று சித்தம் செய்து கொண்டிருக்கும் தருவாயில், ரங்கவடிவேலுவின் தாயார் மரணமடைந்ததாகச் செய்தி வந்தது! அப்பொழுது எங்கள் மனநிலைமை எப்படியிருந்திருக்க வேண்டுமென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் தாங்களே ஊகித்துக் கொள்வார்களாக! அரங்கத்திற்காக ஏற்றிய விளக்குகளை யெல்லாம் மெல்ல அணைத்துவிடச் சொல்லி விட்டு சித்தம் செய்திருந்த உணவையும் உட்கொள்ளாது, தலை சாய்த்தவண்ணம் மௌனமாய் எங்கள் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்தோம். இதுவரையில் எங்கள் சபையில் இம்மாதிரியாக ஏற்படுத்திய நாடகமானது நடவாமற் போனதில்லை . இதற்குப் பிறகு இரண்டொரு முறை நாடகத் தேதியானது சில அசந்தர்ப்பங்களால் மாற்றி வைக்கப்பட்ட போதிலும், எல்லாம் சித்தம் செய்த பிறகு, க்ஷவரம் செய்து கொண்டு வேஷம் தரிக்க சித்தமாயிருந்தவர்கள், இப்படிப்பட்ட காரணத்தினால் நாடக மாடாது கலைந்ததில்லை. எங்கள் சபையிலும் மற்றெந்தச் சபையிலும் இப்படிப்பட்ட துக்ககரமான காரணத்தினால் எப்பொழுதும் எந்த நாடகமும் தள்ளி வைக்கப்படாமல் இருக்குமாறு எல்லாம் வல்ல கடவுளின் கருணையைப் பிரார்த்திக்கிறேன். எனக்கு முக்கியமாக, எனது நண்பரின் தாயார் இறந்ததுகூட அத்தனை வருத்தத்தைத் தரவில்லை; அன்று அந்நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று எதிர் பார்த்திருந்த ஸ்திரீ புருஷர்களுக்கு இன்று நாடகம் இல்லை, வீட்டிற்குப் போங்கள் என்று எந்த முகத்துடன் சொல்வது? என்றே அதிகத் துக்கப்பட்டேன். எனது நண்பராகிய பாலசுப்பிரமணிய ஐயரும், “நாடகம் இன்று இல்லாமற்