பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

283





போனாற்போகிறது. இன்னொரு நாளைக்குப் பிறகு வைத்துக் கொள்வோம். வரும் ஜனங்களுக்கெல்லாம் இன்று நாடகம் கிடையாது; என்று எப்படிச் சொல்லியனுப்பப் போகிறேன்” என்றே துயரப்பட்டார். ஆங்கிலத்தில் “மனிதன் ஒருவிதமாக ஆரம்பிக்கிறான், தெய்வம் ஒருவிதமாக முடித்து வைக்கிறது” என்று ஒரு பழமொழி உண்டு. அதை நினைத்து ஒரு விதமாக என் மனத்தைத் தேற்றிக்கொண்டு, கரைந்த மனத்தினனாய், மைலாப்பூரை விட்டு, சிந்தாதரிப்பேட்டைக்கு என் நண் பருக்குத் தேறுதல் சொல்ல அன்றிரவு சென்றேன்.

பிறகு அவரது தாயாருக்குச் சடங்குகளெல்லாம் கழிந்த பின், சில தினங்கள் பொறுத்து, அவரது மனத்தைத் தேற்றின வனாய், மெல்ல அவரிடம், நாம் ஒப்புக்கொண்ட நாடகத்தை எப்படியாவது ஆடித்தான் தீர வேண்டுமென்று சொல்ல, அவரும் அதற்கிசைய, இரண்டாம் முறை ஒரு நாள் குறித்துக்கொண்டு, இம்முறை தெய்வச கடாட்சத்தினால் நிர்விக்கினமாய் இந்நாடகத்தை நடத்தி முடித்தோம்.

அன்று நடந்த நாடகம் நன்றாயிருந்ததா இல்லையா வென்பதற்குக் கீழக்கண்ட சமாச்சாரத்தை எடுத்துக் கூறுகிறேன். அதைக் கொண்டே இதை வாசிக்கும் எனது நண்பர்கள் ஊகித்தறியலாம்.

இச்சமயம் ஹைகோர்ட்டில் பிரபலமான வக்கீலாயிருந்தவர்களுள், ஏறக்குறைய முதலாயிருந்தவர் என்று வி. கிருஷ்ணசாமி ஐயரைச் சொல்லலாம். இவர், வக்கீல்கள் சபையில் சில இளைய வக்கீல்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, பாலசுப்பிரமணிய ஐயர் எங்கள் சபையார் ரானடே புஸ்தக சாலைக்காக ஒரு நாடகம் நடத்தப் போகிறதாகத் தெரிவித்து, அதற்காக ஒரு டிக்கட்டு வாங்கும்படியாக வி. கிருஷ்ணசாமி ஐயரைக் கேட்டனராம். நல்ல விஷயமாக இருக்கிறதேயென்று கிருஷ்ணசாமி ஐயர் ஒப்புக்கொண்டு ஒரு டிக்கட்டையோ இரண்டு டிக்கட்டையோ வாங்கிக்கொண்டு என்ன நாடகம் நடக்கப் போகிறதெனக் கேட்க, ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் எழுதிய “ஆஸ் யூ லைக் இட்” என்னும் நாடகத்தைத் தமிழில் நடத்தப் போகிறார்கள் என்று இவர் பதில் உரைக்க, “ஷேக்ஸ்பியர்நாடகத்தைத் தமிழில் நடத்துவதாவது! வாட் நான்சென்ஸ்! (What nonsense!) ஷேக்ஸ்பியரைக் கொல்வதை நான் பார்க்க இஷ்டமில்லை” என்று மிகவும் கோபத்துடன் மொழிந்தனராம்.