பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

நாடக மேடை நினைவுகள்




அதன்மீது பாலசுப்பிரமணிய ஐயர், அவரைச் சாந்தப்படுத்தி, “அப்படி ஒன்றும் ஆபாசமாயிராது. கொஞ்சம் நேரமாவது வந்து பாருங்கள். உங்கள் மனத்திற்குப் பிடித்தால் இருங்கள், இல்லாவிட்டால் நீங்கள் வீட்டிற்குப் போய் விடுங்கள். மைலாப்பூரில் ரானடே புஸ்தக சாலைக்காக, இச்சபையார், உதவி செய்ய முன் வந்திருக்கும்பொழுது, நாம் அவ்வளவாவது அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டாமா?” என்று வற்புறுத்தவே, மனமில்லாமலிருந்தும் அவரது வேண்டுகோளுக்கிசைந்து, கொஞ்ச நேரந்தானிருக்கக் கூடும் என்று விடை பகர்ந்தனராம். பிறகு அவருடனிருந்த இளைய வக்கீல்களும், அவர் எண்ணியது போல எண்ணிய வர்களாய், நாமும் போய்ப் பார்ப்போம் என்று தீர்மானித்துக் கொண்டார்களாம். அப்படித்தீர்மானித்துக் கொண்டவர்களுள் ஒருவர் கே. எஸ். ராமஸ்வாமி சாஸ்திரியார் என்பவர்; இப்பொழுது இவர் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாக வேலை பார்க்கிறார்; இவர்தான் இங்கு வக்கீல் அசோசியேஷனில்மேல் நடந்த விருத்தாந்தத்தைத் தஞ்சாவூரில் “தென் இந்திய - நாடக மேடை”யைப்பற்றி நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு உபன்யாசம் செய்தபொழுது, அக்கிராசனாதிபதியா யிருந்து, இதையெல்லாம் விவரமாய்ப் பலர் அறிய எடுத்துரைத்தார்; இவர் மூலமாகத்தான் நான் இதை அறிந்தேன்.

இவர்களெல்லாம் தங்கள் தீர்மானப்படி, ம-ள-ள-ஸ்ரீ வி. கிருஷ்ணசாமி ஐயருடன், நாடகம் ஆரம்பமாகும் சமயத்தில் வந்திருந்து முதலில் உட்கார்ந்திருந்தனர். நாடகம் நடக்க நடக்க, அதை வெறுப்பதைவிட்டு, “விரும்பிய விதமே” என்று நான் அதற்குப் பெயர் வைத்ததற்கிசைய, விரும்பத் தொடங்கினார் களாம். நாடகமானது ஏறக்குறைய நான்கு மணி நேரத்துக்கு மேல் நடந்தபோதிலும் உட்கார்ந்த இடம் விட்டுப் பெயராது கடைசிவரையில் இருந்தனர். ஆங்கிலத்தில், “பரிகசிக்கக் கோயிலுக்கு போய், பரமனைத் தொழ நின்றார்கள்” என்று பொருள்படும்படியான ஒரு பழமொழியுண்டு. அதுபோல, இவர்கள் “புரை (குற்றம்) கூற வந்தவர்கள், புகழ நின்றார்கள்” என்று கூறலாம்; இவர்களுள் ஒருவர் எனக்கு நேராகக் கூறிய வார்த்தைகளையே இங்கு எழுதியுள்ளேன். இனி கொஞ்சம் நிமிஷம்தான் இருப்பேன் என்று கூறிய வி. கிருஷ்ணசாமி ஐயர் செய்ததைக் கூறுகிறேன். இவர் நான்கு மணிக்குமேல் இடம்