பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

15


டிருந்தார். முத்துக்குமாரசாமி செட்டியார், அப்பொழுதுதான் பி.ஏ. பரீட்சையில் தேறி, அவர் தகப்பனார் ஊ. புஷ்பரத செட்டியார் காலஞ்சென்றமையால் அவர் ஸ்தாபித்த கலாரத்னாகரம் அச்சுக்கூடத்தை மேல் விசாரணை பார்க்க ஆரம்பித்தார். நான், (இப்பதத்தை இவ்வியாசங்களில் அடிக்கடி உபயோகிக்க வேண்டி வரும்; இதற்குக் காரணம் என் அகம்பாவமன்று; எனது நாடகமேடை நினைவுகளைப் பற்றி நான் எழுதப் புகுந்தமையால் இப்பதம் அடிக்கடி உபயோகிக்க வேண்டியது அவசியமாகிறதென எனது நண்பர்கள் குறிப்பார்களாக) அக்காலம், சென்னை பிரசிடென்சி (Presidency) கலாசாலையில் பி.ஏ. பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அப்பொழுது வயது 18; என் தகப்பனார் பள்ளிக்கூடங்களுக்கு இன்ஸ்பெக்டர் (Inspector) வேலையிலிருந்து, 60 வயதாகிக் கொஞ்ச காலத்திற்கு முன் பென்ஷன் வாங்கிக்கொண்ட ம-ள-ள-ஸ்ரீ பம்மல் விஜயரங்க முதலியார். சம்பத்து செட்டியார் என்பவருக்கும் ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். பி.சி. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பி.ஏ. பட்டம் பெற்றிருந்தார். அவருக்கு என்னைவிட சுமார் நான்கு ஐந்து வயது அதிகமாயிருக்கும். இங்ஙனம் சுகுண விலாச சபையை ஸ்தாபித்தவர்கள் எழுவரும் சிறு வயதுடையவர்களாயிருந்தோம். அன்றியும் எங்களுக்குள் சிலருடைய தகப்பன்மார்கள் உயர் பதவியிலிருந்து சம்பாத்தியமுடையவர்களா யிருந்தபோதிலும், நாங்களாகப் பெரும்பாலும் சுயார்ஜிதமுடையவர்களாயில்லை. எங்களுக்குக் கையில் பணம் இல்லாவிட்டாலும், மேற்கொண்ட கருமத்தை முடிக்க வேண்டுமென்னும் கருத்தில் பெரும் உற்சாகம் மாத்திரம் எங்கள் மனத்தில் குடிகொண்டிருந்தது என்று நான் உறுதியாய்க் கூறவேண்டும். இந்த உற்சாகமே அன்று முதல் இன்றுவரை நாற்பது வருஷங்களாக அச் சபையை என்ன இடையூறுகள் இடையில் வந்த போதிலும், அவற்றையெல்லாம் பாராது, ஈசன் கருணையினால் தளரா ஊக்கத்துடன் நடத்தி வரும்படி செய்ததெனக் கூறல்வேண்டும். இதுதான் சுகுண விலாச சபை பிறந்த கதையும் நாமகரணம் செய்யப்பட்ட கதையுமாம்; இனி அது வளர்ந்தோங்கிய கதைகளைப் பின்வரும் அத்தி யாயங்களில் இறைவன் திருவருளை முன்னிட்டு எழுதுகிறேன்.