பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

285





பெயராது நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்து, நாடகம் முடிந்தவுடன், நாங்கள் வேஷங்களைக் கலைத்துக் கொண்டிருக்குமிடத்திற்கு வந்து, இந்நாடகத்தை எழுதியது யார் என்று விசாரித்த பாலசுப்பிரமணிய ஐயர், என்னை , “இவர்தான் சம்பந்தம்” என்று தெரிவிக்க, என்னை அதிகமாகப் புகழ்ந்து பேசினார். அன்றியும் அன்று நாடகத்தில் நடித்த முக்கியமான ஆக்டர்களையெல்லாம் இன்னார் இன்னாரென்று தெரிந்துகொண்டு, அவர்களாடியது மிகவும் நன்றாய் இருந்ததெனக் கொண்டாடினார். இதனுடன் நிற்காமல், “என்ன மிஸ்டர் சம்பந்தம், மழை வரும் போலிருக் கிறதே, இந்த மழையில் நீங்கள் எல்லாம் எப்படி வீடு போய்ச் சேருவது? என் வீட்டில் இன்றிரவு தங்கி நாளைக் காலை போகலாம்” என்று சொல்லி, நாங்கள் எல்லாம் வேஷம் கலைத்த பிறகு, எங்கள் எல்லோரையும் மைலாப்பூர்கிளப்புக்கு எதிரிலிருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய், எங்களுக் கெல்லாம் பால் சோடா முதலியன தாகத்திற்குக் கொடுத்து அனைவருக்கும் படுக்கைகள் ஏற்படுத்தி உறங்கச் செய்து விட்டு, மறுநாள் காலை எங்களை யெல்லாம் தந்தசுத்தி செய்துகொள்ளச் செய்து அனைவருக்கும் காபி கொடுத்து, வண்டியில்லாத சில ஆக்டர்களுக்குத் தன் வண்டியையும் கொடுத்து, எங்களை வீட்டிற்கனுப்பினார். அன்று முதல் வயதிலும், செல்வத்திலும், புத்தியிலும் எல்லாவிதத்திலும் என்னைவிட மேம்பட்டவராயிருந்தபோதிலும், தன் மரணபர்யந்தம் வரை என்னைத் தன் நண்பனாகவே பாவித்து வந்தார். “முகநக நட்பது நட்பு அன்று நெஞ்சத்தக நட்பது நட்பு” என்று தெய்வப்புலமை திருவள்ளுவர் கூறிய உண்மையை இவர்பால் நன்கு அறிந்தேன். இதனுடன் நிற்காமல், சீக்கிரம் எங்கள் சபையின், அங்கத்தினராகி சீக்கிரத்தில் எங்கள் சபையின் பிரசிடென்ட் (President) ஆகவும் ஒப்புக்கொண்டு, தன் மரணபர்யந்தம் எங்கள் சபைக்குப் பலவிதங்களிலும் உதவிபுரிந்துள்ளார். அதன் விவரங்கள் ஆங்காங்கு இனி எடுத்துரைப்பேன். ஆயினும் இங்கு ஒரு விஷயம் மாத்திரம் எடுத்துரைக்க விரும்புகிறேன். இவர் நமது தேசமும் எங்கள் சபையும் செய்த தௌர்ப்பாக்கியத்தால், சில வருஷங்களுக்குள் காலகதியடைந்தார் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. அக்காலம் வரையில் எப்பொழுது எங்கள் சபையைப்பற்றிப்