பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

நாடக மேடை நினைவுகள்


பேசும்படி நேரிட்டாலும், “எங்கள் சபை” “நம்முடைய சபை” என்று கூறியது தவிர “உங்கள் சபை” என்று அவர் வாயால் கூறியதை நான் ஒருக்காலும் கேட்டதில்லை, இவர் எங்கள் சபைக்குச் செய்த பேருதவிக்கெல்லாம். எங்கள் சபையார். இவர் தேக வியோகமானபின், இவரது ஞாபகச் சின்னமாக இவரது சிலை உருவை ஸ்தாபிக்க வேண்டுமென்று பாங்க்வேட்டிங் ஹாலில் பொதுஜனக் கூட்டம் சேர்ந்த பொழுது அன்று இதன் பொருட்டு 1000 ரூபாய் எங்கள் சபையார் கொடுக்க இசைந்து, உடனே கொடுத்துத் தங்கள் கடனை ஒருவாறு கழித்துக் கொண்டனர் என்று கூறலாம்! ஆயினும் இச்சீமான் எனக்குச் “செய்யாமற் செய்த” உதவிக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? தெய்வப் புலமை நாயனார், “செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் மாற்றலரிது” என்று கூறியதை நினைத்துக் கடனைத் தீர்க்க அசக்தனாயிருக்கிறேன் என்று ஒப்புக் கொள்வதன்றி வேறு ஒன்றும் செய்ய அசக்தனாயிருக்கிறேன்.

மேற்சொன்னபடி இவருக்கும் இன்னும் இதரமைலாப்பூர் வக்கீல்களுக்கும் அவ்வளவு சந்தோஷத்தை உண்டுபண்ணின ஆக்டர்களைப்பற்றி இனிக் கொஞ்சம் வரைகிறேன்.

முக்கியமாக சுசீலா வேஷம் தரித்த அ. கிருஷ்ணசாமி ஐயரும், ராஜீவாட்சி வேடம் தரித்த எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும்தான் இவர்கள் மனத்தை மிகவும் திருப்தி செய்தனர் என்று நான் கூற வேண்டும். இவர்களிருவருடைய நடையுடை பாவனைகளும் வசனமும் சங்கீதமும் மிகவும் நன்றாயிருந்ததென இவர்கள் எல்லோரும் புகழ என் காதாறக் கேட்டேன். நாடக மேடை மீது பொறாமையின்றி ஒத்து நடித்த இவர்களைப் போன்று இரண்டு ஆக்டர்களை இன்னும் நான் காணப் போகிறேன். இவர்கள் பாடிய பாடல்களில் “ராஜராஜ” என்கிற ஒரு பாட்டு இன்னும் என் செவியில் தொனிக்கிறது. இவர்களிருவரும் இப்பாட்டை மேடையின்மீது பாடும் பொழு தெல்லாம், இதை மறுபடியும் பாடும்படி கேளாத சபைக் கூட்டத்தை நான் கண்டதில்லை. இதை ஒரு முறை எனது நண்பர் சி.பி. ராசாமி அய்யர் கிராமபோனில் எடுக்க முயன்றார். யாது காரணத்தினாலோ அது கைகூடாமற் போயிற்று. அது சங்கீதப் பிரியர்களின் துரதிர்ஷ்டமென்றே நான் கூற வேண்டும்.