பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

நாடக மேடை நினைவுகள்



அறையில் அடைபடுவதென்றால் மிகவும் கஷ்டமாயிருந்தது. அன்றியும், சென்னைக்குப் பாரசீகக் கம்பெனியார் வந்த பிறகு, அவர்களைப்போல் நாமும் நாடகக் காட்சிகளைக் காட்ட வேண்டுமென்று விரும்பிப் படுதாக்கள் முதலியன தயார் செய்த நாங்கள், விக்டோரியா பப்ளிக் ஹாலின் மெத்தையின் மீதுள்ள நாடக மேடையில் அவர்களைப்போல் காட்சிகளைக் காட்டுவது அசாத்தியமெனக் கண்டறிந்தோம். அவர்கள் ஆடிய அரங்க மேடையானது விக்டோரியா மேடையைவிடக் குறைந்தபட்சம் ஆறு பங்காவது அதிகமானதாயிருக்கும். இவ்விரண்டு முக்கியக் காரணங்களால், எப்படியாவது நமது சபைக்கென்று விசாலமான நாடக மேடையும் இருப்பிடமும் இருக்க வேண்டுமெனக் கோரத் தலைப்பட்டோம். ஆகவே இதற்கென்று நாம் பொருள் சேகரிக்க வேண்டுமென்று தீர்மானித்து, இவ் வருஷம் முதல் எங்கள் வருஷாந்திர வரும்படியில் செலவு போக மிச்ச ரூபாயை ஒரு பண்டாகச் சேர்த்து வைக்கத் தலைப்பட்டோம். இதுதான் தற்காலம் ஒரு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய்க்கு மேற்பட்டிருக்கும் கட்டட பண்டின் (Building Fund) அங்குரார்பணமாகும். இதைப்பற்றி நான் பிறகு அதிகமாய் எழுத வேண்டி வரும்.

இவைகளெல்லாம் அன்றி, இவ் வருஷம்தான் எங்கள் சபையார் முதன் முதல் தசரா அல்லது நவராத்திரிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்தது. அன்று முதல் இந்த இருபத்தெட்டு வருடங்களாக நாங்கள் நடத்திவரும் இந்தசராக் கொண்டாட்டம் ஆரம்பமான விதம் கொஞ்சம் வேடிக்கையா யிருக்குமாதலால் , அதைச் சற்று விவரமாய் இங்கு எழுத இதை வாசிக்கும் எனது நண்பர்களின் அனுமதியைக் கேட்கிறேன்.

சில வருஷங்களாக சரஸ்வதி பூஜையை எங்கள் சபையில் கொண்டாடி வந்தோம். இவ்வருஷம் விநாயக சதுர்த்தி வர, என் தமயனார் மண்ணாற் சமைத்த ஒரு பெரிய பிள்ளையாரை வாங்கி வந்து, அதற்குப் பொன்மயமான கில்டு ரேக்குகளை யெல்லாம் ஒட்டி, பூஜைக்காக சபையில் வைத்தார். சாயங்காலம் ஆக்டர்களெல்லாம் ஒருங்கு கூடி அதற்குப் பூசை செய்தோம். பிள்ளையாருக்கு நிவேதனம் செய்து அவர் பெயரைச் சொல்லி நாங்கள் எல்லாம் அவல் கடலை சுண்டல் முதலியவற்றை யெல்லாம் புசித்தோம். மறுநாள் அதற்குப் புனர்பூசை செய்தபொழுது, ‘பிள்ளையார் அழகாயிருக்கிறதே, இதை சமுத்திரத்திற்குக் கொண்டு போய்த் தண்ணீரில் போட்டு