பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூன்றாம் அத்தியாயம்

சுகுண விலாச சபையை மேற்சொன்னபடி 1891 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் தேதி ஸ்தாபித்தவுடன் நாங்கள் காலத்தை வீணாகக் கழிக்கவில்லை. உடனே ஒரு வாரத்திற்கெல்லாம் நிர்வாக சபைக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அதில் சபைக்கு அங்கத்தினரைச் சேர்ப்பதற்காக ஒரு பிரசுரம் அச்சிட்டு வெளியிட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்தின்படி ஒரு விளம்பரத்தை ஆங்கிலேய பாஷையில் நான் எழுதினேன். அதுதான் நான் எழுதியவற்றுள் முதல் முதல் அச்சிடப்பட்ட விஷயமாகும். அச்சிடப்பட்டு வெளிவந்த அந்த விளம்பரத்தை நான் பார்த்தபொழுது எனக்கு ஒருவித மகிழ்ச்சியுண்டாயது. அதில் சுகுண விலாச சபை சென்னையில் ஏற்படுத்தப்பட்ட காரணமும், அக்காலத்தில் நமது தேசத்தில் நடத்தப்பட்ட நாடகங்களிலுள்ள குறைகளும், அக் குறைகளைத் தீர்க்க மேற்படி சபையார் மேற்கொண்ட மார்க்கங்களும், தெரிவிக்கப்பட்டிருந்தன. சாதாரணமாக அச் சபையைச் சார்ந்த பழைய காகிதங்களை யெல்லாம் நான் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வந்தும், இந்த விளம்பரத்தின் பிரதியொன்று, இப்பொழுது நான் எங்கெங்கு தேடிப் பார்த்தும் எனக்கு அகப்படவில்லை. இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எவர்களுக்காவது நாற்பது வருடங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்ட அக்காகிதம் ஒன்று கிடைக்குமாயின், அதை என் விலாசத்திற்கு அனுப்புவார்களாயின் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவனாயிருப்பேன். மேற்கண்டபடி அச்சிடப்பட்ட விளம்பரங்கள் சிலவற்றை நான் அக்காலம் வாசித்துக் கொண்டிருந்த ராஜதானி கலாசாலைக்குக் கொண்டு போனேன். ஆயினும் நானாக என்னுடன் வாசிக்கும் என் வயதுடைய சிறிய நண்பர்களுக்குக் கொடுக்க வெட்கப்பட்டவனாய், மத்தியான போஜனத்திற்காக ஒரு மணி சாவகாசம் விட்டபொழுது, அக் காலாசாலை சேவகன் ஒருவனிடம் கொடுத்து கலாசாலை மாணவர்களுக்குக் கொடுக்கச் செய்தேன். இச் சமாச்சாரத்தை இங்கு முக்கியமாகக் குறிப்பிட்ட காரணம், இப்போதிருப்பதுபோல் அல்லாது, அக்காலம், ஒரு நாடகச் சபையைச் சேர்ந்திருப்பதென்றால்,