பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

297


களில் 500, 600 சிறு குழந்தைகள் ஒருங்கு கூடியிருக்கும் காட்சியை நான் பன்முறை கண்டிருக்கிறேன். அச் சமயங்களில் அத்தனைக் குழந்தைகளும் முகமலர்ச்சியோடு வேடிக்கையாய் இரண்டு மூன்று மணி சாவகாசம் ஒருங்கே கழிப்பதைக் கண்டு சந்தோஷப்படாத மனிதனை நான் ஒரு முறையாவது கண்டேன் இல்லை! இவ்வாறு சிறு குழந்தைகளை வருஷத்தில் ஒரு தினமாவது ஒருங்கே சேர்த்துச் சந்தோஷிக்கச் செய்வது எங்கள் சபை செய்த பாக்கியம் என்று கருதுகிறேன்.

இவ்வாறு இவ்வருஷம் தொடங்கிய தசராக் கொண்டாட் டமானது இதுவரையில் ஈஸ்வர கிருபையால் தடைப்படாது நடந்து வருகிறது.

இவ்வருஷம் எங்கள் சபையில் ஆரம்பித்த இன்னொரு புதிய விஷயம் என்னவென்றால், நாடகக் கவிகளைப் பற்றியும் சிறந்த நாடகங்களைப் பற்றியும் கற்றறிந்த பெரியோர்களைக் கொண்டு உபன்யாசங்கள் செய்யும்படி செய்ததே. இவ்வருஷம் காலஞ்சென்ற பண்டிட் சதாவதானம் T. E. ஸ்ரீனிவாஸாச்சாரியார் அவர்கள் “நாடகம் நடிக்கும் லட்சணங்கள்” என்பதைப்பற்றி ஒரு உபன்யாசம் செய்தார். ஆர்தர் டேவிஸ் என்பவர் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய “ஹாம்லெட்” என்னும் சிறந்த நாடகத்தைத் தக்க அபிநயத்துடன் படித்துக் காட்டினார். இவ்வாறு அவர் படித்துக் காட்டியது முக்கியமாக எனது வேண்டுகோளுக்கிணங்கியாம். நான் அவரைக் கேட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதாவது அந்நாடகத்தை நான் தமிழில் அமைத்து முடித்து எங்கள் சபையில் அதை ஆட வேண்டுமென்று இச்சை கொண்டதேயாம்.

இனி அந்த “அமலாதித்யன்” நாடகத்தைப்பற்றிக் கொஞ்சம் விரிவாக எழுத விரும்புகிறேன். அதற்கு முக்கியமான காரணம், இந்நாடகத்தை நான் எழுதியுள்ள நாடகங்களிலெல்லாம் சிறந்தது என்று பெரும்பாலார் கூறுவதே யாம்; அன்றியும், நான் மேடையின் மீது நடித்த பாத்திரங்களில் எல்லாம்; இந்த நாடகத்தில் அமலாதித்யனாக நடித்தது மிகவும் சிலாகிக்கத்தக்கதென்று எனது நண்பர்கள்