பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/313

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

நாடக மேடை நினைவுகள்


அநேகர் கூறக் கேட்டிருக்கிறேன். அன்றியும் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் இந்நாடகத்திற்காக நான் எடுத்துக் கொண்ட சிரமம், மற்றெந்த நாடகத்திற்கும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே இதைப்பற்றிப் பல விவரங்களை இங்கு எழுத என் நண்பர்களுடைய உத்தரவைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஷேக்ஸ்பியர் என்பவர் நாடகக் கவிகளுக்குள் எல்லாம் மிகச் சிறந்தவர் என்று உலகத்தோரில் யாவராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறது. அவர் எழுதிய சுமார் 42 நாடகங்களுக்குள் ‘ஹாம்லெட்’ என்பதுதான் மிகச் சிறந்தது என்று கற்றறிந்தோரால் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அன்றியும் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள எல்லாப் பாஷைகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறுவது மிகையாகாது. ஆசியாக் கண்டத்திலுள்ள ஜப்பான் முதலிய தேசத்து பாஷைகளிலும் மொழிபெயர்க் கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன். அன்றியும் இங்கிலாந்து தேசத்தில் இந்நாடகத்தின் கதாநாயகனாகிய ‘ஹாம்லெட்’ என்னும் பாத்திரத்தை ஆட இச்சை கொள்ளாத நடிகர் கிடையாதென்றே சொல்லலாம். என்னைக் கேட்குமிடத்து, இதைப் படிக்கும் எவனும் தன்னிடம் கொஞ்சமாவது நாடகமாட வேண்டுமென்னும் இச்சையுடையவனாயின், இவ்வேஷம் தரிக்க வேண்டுமென்று விரும்பாதவன் இவ்வுலகிலேயே இல்லையென்று கூறுவேன். மாடம் சாரா பெர்ன் ஹார்ட் (Madame Sarah Bernhart) என்னும் பிரெஞ்சு தேசத்திய ஸ்திரீ, தான் ஆண் வேடம் பூண்டு, தன் 50ஆம் வயதில் இந்த வேடத்தைத் தரிக்கப் பிரியப்பட்டு, அவ்வண்ணமே நடித்தாள் என்றால், இதைப்பற்றி நான் அதிகமாகக் கூற வேண்டிய நிமித்தமில்லை என்று நினைக்கிறேன். நாடக மேடை ஏறியிராத, இதை வாசிக்கும் சில நண்பர்கள், இப் பாத்திரத்தில் என்ன அவ்வளவு ஆக்டர்களுடைய மனத்தைக் கவரும்படியான சூட்சுமம் இருக்கிறதெனக் கேட்கக்கூடும். நானும் இதைப்பற்றிப் பன்முறை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். இப் பாத்திரத்தில் ஒரு நடிகன் தன் முழு சாமர்த்தியத்தையும் காட்டப் போதுமான இடங்கள் ததும்பியிருக்கின்றனவென்பதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்னும் தீர்மானத்திற்கு வந்தேன். ஒவ்வொரு நாடகமும் கதாநாயகன் ஒன்றிரண்டு ரசங்களை