பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

299


முக்கியமாகக் காட்ட இடங்கொடுக்கும். சில நாடகங்களில் ஹாஸ்ய ரசத்தைக் காட்டலாம்; சில நாடகங்களில் கருணா ரசத்தைக் காட்டலாம்; சிலவற்றுள் சிருங்கார ரசத்தைக் காட்டலாம். இன்னும் இப்படியே மற்ற நாடகங்கள் மற்ற ரசங்களை நடித்துக் காட்ட இடங்கொடுக்கும். இந்த ஒரு நாடகப் பாத்திரத்தில்தான் எல்லா ரசங்களையும் எடுத்துக் காட்டச் சிறந்த இடங்கள் உண்டு. சுருக்கிச் சொல்லுமிடத்து இந்தப் பாத்திரத்தைத் திருப்திகரமாய் ஆடத்தக்கவன் எந்தப் பாத்திரத்தையும் நன்றாயாடுவான் என்பதற்கையமில்லை; ஆகவே இப் பாத்திரத்தைச் சபையோர் மெச்சும்படியாக நடிப்பது மிகவும் கடினமென்று எனது நண்பர்கள் அறிவார்களாக. அதனால்தான் இப்பாத்திரத்தில் பெயர் எடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு நடிகனும் விரும்புவது போலும்! அன்றியும் ஷேக்ஸ்பியர் காலம் முதல் இங்கிலாந்து தேசத்தில், பிரபல ஆக்டர் என்ற பெயர் பெற்ற ஒவ்வொரு நடிகனும் இதை நடித்திருக்கிறான். பூர்வகாலத்தில் எட்மண்ட் கீன் (Kean), கெம்பில் (Kemble) முதலிய பிரசித்தி பெற்ற ஆக்டர்களும், தற்காலத்தில் சர்ஹென்றி இர்விங், சர் பிர்போம் டிரி (Sir Beerbohm Tree), சர் போர்ப்ஸ் ராபர்ட்ச ன் (Sir Forbes Robertson), சர் பென்சன் (Sir Benson) முதலிய ஆக்டர்களும் இதில் பிரசித்தி பெற்றிருக்கின்றனர். அமெரிக்க தேசத்தில் எட்வின் பூத் (Edwin Booth) என்பவர் இப் பாத்திரத்தில் மிகவும் கியாதி பெற்றிருந்தார். ஆகவே எல்லா ஆக்டர்களும் இதை ஆட விரும்புவது ஓர் ஆச்சரியமன்று. இந்த ஆசை எனக்கும் கொஞ்சம் இருந்ததென நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே. ‘போதாக் குறைக்கு பொன்னியம்மன் குறை’ என்றவாறு எனது நண்பர் வாமன்பாய் என்பவர், இப்பாத்திரம் உன்னால் சரியாக ஆட முடியாதென்று கூறியது, என்னை எப்படியாவது இந் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, இப் பாத்திரத்தை நான் ஆட வேண்டுமென்று உந்தியதென்கிற விஷயத்தை எனது நண்பர்களுக்கு முன்னமே தெரிவித்திருக்கிறேன். இவ்வாறு உந்தப்பட்டவனாய், ‘ஹாம்லெட்’ என்னும் பெயருக்கு ஒப்ப, அமலாதித்யன் என்று பெயர் வைத்து இச் சிறந்த நாடகத்தைத் தமிழில், ஆறு வருடங்களுக்கு முன்பாக எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகக்