பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/315

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

நாடக மேடை நினைவுகள்


கஷ்டப்பட்டு இந்த ஆறு வருடங்களாக எழுதி ஒருவாறு முடித்தேன். முடித்த பிறகு, எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் இதைக் கொண்டுபோய், நாள் தோறும் அவருக்குச் சவகாசமிருக்கும் பொழுதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் காட்டி அவர் சொல்லும் படியான திருத்தங்களையெல்லாம் குறித்துக்கொண்டு வந்தேன். இப்படி ஏறக்குறைய ஆறு மாதம் கழிந்தது. சில சமயங்களில், கஷ்டமான பாகங்கள் வரும்பொழுது ஒரு நாளைக்கு நான்கைந்து வரிக்கு மேல் போகாது; சில சமயங்களில் ஒரு பக்கம் இரண்டு பக்கம் முடிந்து போம். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒரு வாக்கியமோ வரியோ, இவைகளைப் படித்து, பிறகு அதன் தமிழ் அமைப்பை நான் கூறுவேன்; எனது நண்பர், ஆங்கிலத்தில் அம் மகா நாடகக் கவி எழுதிய ஒவ்வொரு பதத்தின் அர்த்தமும் சரியாகத் தமிழில் அமைந்திருக்கிறதா என்று ஆழ்ந்தாராய்வார்; கொஞ்சமாவது தன் மனத்திற்குத் திருப்திகரமாயில்லாவிட்டால், “ஜெஷ்டை! அதென்னடா அது? சரியாயில்லை யென்றால்! இன்னொரு தரம் படி” என்று மறுபடியும் படிக்கச் சொல்வார். இவ்வாறு ஒவ்வொரு வாக்கியத்தையும் படித்துப் படித்துத் திருத்தித் திருத்தி, தன் மனத்திற்குத் திருப்திகரமாகிற வரையில் விடமாட்டார். முதலிலேயே ஏதாவது நான் சரியாக எழுதி விட்டிருந்தால், உடனே எனக்கு இரண்டு மார்க்குகள் கொடுப்பார்! இதற்கு நான் அர்த்தம் கூறாவிட்டால் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு இது வெளிப்படையாகாது. பால்ய சிநேகிதர்களான எங்களுக்குள் அநேக வருஷங்களாக, ஏதாவது நன்றாகச் செய்தாலும் சொன்னாலும், ஒருவருக்கொருவர் மார்க்குகள் (Marks) கொடுத்துக் கொள்வது வழக்கம். இரண்டு மார்க்குகள்தானா, என்று எனது நண்பர்கள் பரிஹசிக்க வேண்டாம். எங்களுடைய நியமனப்படி இரண்டு மார்க்குகள்தான் அதிகப்படி (Maximum); இதைப் பெறுவது மிகவும் கடினம். சாதாரணமாக ஒரு மார்க் அரைமார்க்தான் வரும்! மேற்சொன்னபடி என் பால்ய நண்பருக்கு ஏறக்குறைய ஆறு மாசம் கஷ்டம் கொடுத்து, இந்நாடகத்தை எழுதி முடித்தேன். தன் அலுவல்களையும் கவனிக்காது,