பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/316

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

301


சிரமத்தையும் கவனிக்காது எனக்காக இவ்வளவு கஷ்டமெடுத்துக் கொண்டு, எனக்கு ஆசிரியர் ஸ்தானத்திலிருந்து இந்நாடகத்தைப் பூர்த்தி செய்ய உதவிய என் நண்பருக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? அவரிடம் போய் “இதற்காக உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்?” என்று கேட்க மிகவும் அஞ்சுகிறேன். ஏனெனில், நான் அப்படி அவரைக் கேட்பேனாயின் “இந்தக் கேள்வி கேட்டதற்காக, உனக்கு மைனஸ் 200 மார்க் (minus 200 marks) கொடுக்கிறேன்!” என்று சொல்லி விடுவார்! அந்த மைனஸ் 200 மார்க்கை நான் எப்படிக் கழிப்பது? ஆகவே பேசாமலிருக்கிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் “பயன் றூக்கார் செய்த வுதவி, நயன்றூக்கினன்மை கடலிற் பெரிது” என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவர் கூறியதை ஞாபகப்படுத்திக் கொள்வார்களாக.

நான் எழுதிய இந்நாடகத்தை எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாசய்யங்கார் திருத்தச் செய்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. நான் சிறு வயது முதல், தமிழில் கொஞ்சம் கெட்டிக்காரனா யிருந்தேன் என்று எண்ணுவதற்கு இடமுண்டு. எனது நண்பரோ நான்காம் வகுப்பில் தமிழை விட்டு சம்ஸ்கிருதம் படிக்கத் தொடங்கினார். அப்படியிருந்தும் நாங்களிருவரும் பழைய மெட்ரிக் குலேஷன் (Matriculation) வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை பரீட்சையில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பதில் என்னைவிட அதிக மார்க் (mark) வாங்கினார். அப்பொழுது எனக்கு அவர் மீதிருந்த பொறாமை கொஞ்சமல்ல. தமிழனாய்ப் பிறந்து, தமிழில் கெட்டிக்காரனெனப் பெயர் பெற்ற என்னைவிட இந்தப் பிராமணப்பிள்ளை, தமிழைவிட்டு சம்ஸ்கிருதம் படித்தவன், தமிழ் மொழிபெயர்ப்பில் என்னைவிட அதிக மார்க் வாங்குவதா! என்று என் மனத்திலுதித்த பொறாமையானது அளவிடத்தக்கதன்று. இன்னும் அந்தப் பொறாமை என்னை முற்றிலும் அகலவில்லை யென்றே கூற வேண்டும். அவர் என்னைவிடப் பிரபலமான வக்கீல் எனப் பெயர் பெற்றார். அதற்குச் சந்தோஷப்பட்டேன்; நான் ஸ்மால் காஸ் கோர்ட்டு ஜட்ஜானபோது அவர் ஹைகோர்ட் ஜட்ஜானார், அதற்கும் சந்தோஷப்பட்டேன்; இதிலெல்லாம்