பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

நாடக மேடை நினைவுகள்


சந்தோஷப்பட்டவன், என்னைவிடத் தமிழ் மொழி பெயர்ப்பில் அவர் கெட்டிக் காரராயிருக்கிறாரென நினைக்கும் பொழுதெல்லாம், அந்தப் பழைய பொறாமை என் மனத்தில், “இருக்கிறேன்”என்கிறது! “தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றவெல்லாம், எற்றேயிவர்க்கு நாம் என்று” எனப் பெரியார் கூறிய உண்மை யைக் கடைப்பிடித்து அவரைப் போல் நாமும் இதில் விற்பன்னனாக வேண்டுமென்று விரும்புகிறேனேயொழிய, இப்பொறாமை எனக்கு வேறொரு கெடுதியையும் செய்ய வில்லை. இக் காரணத்தினால்தான் நான் மிகவும் கஷ்டப் பட்டு எழுதிய இந்த “அமலாதித்யன்” என்னும் நாடகத்தை, அவர் பார்வையிட்டுத் திருத்தச்செய்தேன். இந்த நாடகத்தைப் படிப்பவர்கள், இது நன்றாய்த் தமிழில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று எனக்கு (Mark) கொடுக்க விரும்பினால், முதலில் அதில் பாதியை, எனது பால்ய நண்பருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று உறுதியாய்க் கூறுவேன்.

மேற்சொன்னபடி என் நண்பரைக் கொண்டு இந்த நாடகத்தைச் சீர்திருத்திய பிறகு, துண்டுக் காகிதங்களில் இதை என் வழக்கப்படி பென்சிலினால் எழுதியிருந்ததை, ஒரு நோட் புஸ்தகத்தில் கடைசி முறை ஆங்கில நாடகத்துடன் ஒத்திட்டுப் பார்த்து இங்கியினால் எழுதி வைக்க வேண்டுமென்று தீர்மானித்து, சென்னையிலிருந்தால், இதற்கு ஏதாவது அடிக்கடி தடங்கலுண்டாகுமென்று, கோர்ட் விடுமுறைக் காலமானதால் திருவையாற்றுக்குப் போய்ச் சேர்ந்தேன். அத்தருணம் என் தமயனார் ப. அய்யாசாமி முதலியார் அங்கு டிஸ்டிரிக்ட் முன்சீப் (District Munsiff) ஆக விருந்தார்.

அவரிடம், நான் அங்கு வந்த காரணம் இன்னதென்றும், நான் இந்த நாடகத்தை எழுதி முடித்தாகிறவரையில், என்னை அங்குள்ள சிநேகிதர்கள் ஒருவரும் வந்து பார்க்கும்படி விடலாகாதென்றும், வாக்கு வாங்கிக்கொண்டு, அவரும் அதன்படியே செய்ய, மூன்று வாரத்தில், ஒரு மூச்சாய், தூங்குகிற வேளை - சாப்பிடுகிற வேளை தவிர இதே வேலையில் உட்கார்ந்து, ஒவ்வொரு வரியாகக் கடைசி முறை ஒத்திட்டுப் பார்த்து எழுதி முடித்தேன். எழுதி