பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/318

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

303


முடித்தவுடன் முதுகின் மீதிருந்த ஒரு பெரும் பாரம் நீங்கினவன்போல் சந்தோஷப்பட்டேன்.

இவ்வாறு எழுதி முடித்தவுடன் என் மனத்தில் ஒரு சிறு பயம் குடிகொண்டது. “சத்ருஜித்”நாடகத்தின் காகிதங்கள் காணாமற் போனபடி இது காணாமற் போனால் என்ன செய்கிறது என்று பயந்தவனாய், என் பென்சில் பிரதியை, என் பெட்டியில் வைத்துக் கொண்டு, நான் இங்கியில் எழுதிய பிரதியை, திருவையாற்றிலிருந்து சென்னைக்கு என் பேருக்கு ரிஜிஸ்டர் செய்து அங்கிருந்து அனுப்பி விட்டு, நான் பென்சில் பிரதியுடன் பட்டணம் வந்து சேர்ந்தேன்! நான் தனியாக ரெயிலேறி வந்தமையால், ஒன்று காணாமற் போனாலும், மற்றொன்றாவது நிற்கும் என்று இம்மாதிரிச் செய்தேன். ஒரு முறை பணம் பறி கொடுத்தவன் இரண்டு முடிப்புப் போடுவானன்றோ!

இவ்வாறு எழுதி முடித்தானவுடன், எங்கள் சபையின் நிர்வாக சபையார் இதைச் சபையில் ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர்; அப்பொழுது அவர்களிடம் நான், “ஒத்திகை களெல்லாம் என் மனத்துக்குத் திருப்திகரமாக ஆகிறவரையில் இந்நாடகத்தைப் பகிரங்கமாக ஆடேன்; அன்றியும், இந்நாடகம் முடிகிறவரையில், வேறெந்த நாடகமும் ஆட மாட்டேன்” என்று கூறிவிட்டேன். இது நடந்தது இவ்வருஷம் ஜூலை மாதம் என்று நினைக்கிறேன். உடனே ஒத்திகைகள் தொடங்கி ஆறு மாதம் இடைவிடாது ஒத்திகை நடத்தினேன். எனது மற்றெல்லா நாடகங்களை விட, இந்த நாடகத்திற்குத்தான் நான் அதிக ஒத்திகைகள் நடத்தினேன் என்று நிச்சயமாய்க் கூறக்கூடும். நான் ஒத்திகைகள் நடத்தும் விதத்தை, நாடக சபைகளில் கண்டக்டர்களாக இருப்பவர்களும் இருக்க விரும்புவோர்களும், அறிய இச்சைப்படுவாரென நம்பி இதைப் பற்றிச் சற்று விவரமாய் இங்கு எழுதுகிறேன்.

ஒரு நாடகத்தை ஆட வேண்டுமென்று தீர்மானித்தவுடன், முதலில் அதை எனது ஆக்டர்களையெல்லாம் ஒருங்கு சேர்த்து அவர்களுக்குப் படித்துக் காட்டுவேன். இதற்கு முன்பாகவே, அந் நாடகத்தைப்பற்றியும் அதன் குணா குணங்களைப்பற்றியும் எழுதியிருக்கும் புத்தகங்கள்