பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

நாடக மேடை நினைவுகள்


ஏதேனும் உண்டேல், அவைகளையெல்லாம் படித்து முடிப்பேன். பிறகு என்னுடைய நாடகமாயிருந்தால் நான் எழுதும்பொழுதாவது, மற்றவர்கள் நாடகமாயிருந்தால், நான் அதைப் படிக்கும்போதாவது, நான் இன்ன ஆக்டருக்கு இன்ன வேஷம் தகுந்ததாயிருக்கும் என்று தீர்மானித்தபடி, அவர்களுக்கு நாடகப் பாத்திரங்களைப் பகிர்ந்து கொடுப்பேன். இதன் மீது ஒவ்வொரு ஆக்டராக, தனிமையில் எடுத்துக் கொண்டு, அவரது பாகத்தை நிதானமாய்ப் படித்துக்காட்டி, அதன் நுட்பங்களையெல்லாம் சொல்லிக் கொண்டு போவேன். பிறகு அவர்களுக்குத் தங்கள் தங்கள் பாகத்தைக் குருட்டுப் பாடம் செய்து கொள்ளும்படி சொல்வேன். இச் சமயம், “உங்கள் வசனங்களை மாத்திரம் குருட்டுப் பாடம் செய்து விடுங்கள்; இன்னமாதிரி அரங்கத்தில் நடிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்து விடாதீர்கள்!” என்று அவர்களுக்குச் சொல்லி வைப்பேன். இதற்கொரு முக்கியமான காரணம் உண்டு. ஆக்டர்களில் எல்லோரும் தேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்; சில புத்திமான்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும் இந்தப் பாத்திரத்தை என்று சரியாகத் தீர்மானிக்கக் கூடும். மற்றவர்கள் தங்கள் பாத்திரத்தைப் படிக்கும்பொழுது, இதை இப்படி நடிக்க வேண்டுமென்று தவறாகத் தீர்மானித்து விட்டார்களோ, பிறகு அவர்களைச் சரியான வழிக்குத் திருப்புதல் மிகவும் கடினம் என்பது என் அனுபவம். சரியாக ஒருவனை நேர்வழியில் அழைத்துக் கொண்டு போவது சுலபம்; அவன் கோணல் வழியில் போனபின், திருப்பிச் சரியான வழிக்குக் கொண்டு வருவது மிகவும் கஷ்டம். ஆகவே அவர்கள் பாகத்தைக் குருட்டுப் பாடம் செய்தானவுடன் அவர்களுடன் கலந்து பேசி இனி இப்படி ஆக்டு செய்ய வேண்டுமென்று நான் அவர்களுக்கு நடித்துக் காட்டும் வரையில், அவர்களாகத் தீர்மானிக்கவிடுவதில்லை. இவ்விஷயத்தில் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நான் பிடிவாதம் செய்வதில்லை என்று நினைக்கிறேன். புத்திமான்களான என் நண்பர்கள், நான் சொல்லிக் கொடுத்தை விட்டு இப்படி நடித்தால் நலமாயிருக்குமல்லவா, என்று ஏதாவது விசேஷமாகச் சொல்வார்களானால்; சரியானால், அதை ஒப்புக்கொண்டு, பிறகுதான் இப் பாத்