பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

305


திரத்தை இவ்வாறு நடிக்க வேண்டுமென்று தீர்மானிப்பேன். நான் எழுதிய நாடகங்களிலும், எனது ஆக்டர் நண்பர்கள் பலர், நான் முதலில் சொன்னதைவிட, மேலாக நடிக்கும் மார்க்கங்களை எனக்குக் காட்டியுள்ளனர். அதை நான் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர்களுடன் கலந்து பேசி இன்னவாறு நடிக்க வேண்டு மென்று தீர்மானித்த பிறகு, அவர்களை ஒவ்வொருவராக, தங்கள் பாகங்களை என்முன் நடித்துக் காட்டச் சொல்வேன். இப்படிச் செய்வதனால் ஒரு முக்கியமான அனுகூலமுண்டு. அநேக ஆக்டர்கள் கூச்சமுடையவர்களா யிருப்பார்கள்; பலர் எதிரில், அவர்கள் நடிப்பது சரியாகவில்லை வேறுவிதமாய் நடிக்க வேண்டுமென்று எடுத்துக் கூறினால், அவர்கள் மனத்தில் மிகவும் உறுத்தலாம். தனித்தனியாக எடுத்துக் கொண்டு, அவர்களை எவ்வளவு திருத்திய போதிலும், இம்மாதிரியாகக் கஷ்டப்படமாட்டார்கள். அன்றியும் புது ஆக்டர்கள், மிகவும் லஜ்ஜையுள்ளவர்களாயிருப்பார்கள். அவர்களைத் தனியாக ஒத்திகை செய்யும்படி செய்தால், அந்த லஜ்ஜை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும். இவ் விஷயத்தில் என்னாருயிர் நண்பரான சி. ரங்கவடிவேலு, எனக்கு மிகவும் கஷ்டம் கொடுப்பவராயிருந்தார். சாதாரண ஒத்திகைகளில், தன் பாகத்தைச் சும்மா படித்துக்கொண்டு போவாரேயொழிய நடித்துக் காட்டமாட்டார். கடைசி ஒத்திகைகளிலும், என் கட்டாயத்தின் பேரில்தான் சரியானபடி நடிப்பார். இதற்கு முக்கியக் காரணம் அவர் மிகவும் கூச்சமுடையவராக இருந் ததேயாம். ஆயினும் தாமோதர முதலியாரைப்போல், அவரிடமும் ஒரு நற்குணமுண்டு. அதாவது, தனக்கு ஏதாவது ஒரு விஷயம் நன்றாய் மனத்தில் உறுத்துகிற வரையில், என்னை அதைப் பன்முறை நடித்துக் காட்டும் படி தொந்தரவு செய்வார். இந்த அமலாதித்திய நாடகத்தில் அவர் எடுத்துக் கொண்ட அபலை (Ophelia) வேஷத்தில், அவர் வரும் கடைசிக் காட்சியில் பைத்தியக்காரியாக நடிக்க வேண்டியிருந்ததை, தனக்குச் சரியாக வருமளவும் நான் எத்தனை முறை அவருக்கு, அதை அவரது வீட்டின் மேல்மாடியில் நடித்துக் காட்டினேன் என்பது, என்னால் கணக்குச் சொல்ல முடியாது.