பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/323

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

நாடக மேடை நினைவுகள்


அறிந்துகொண்டான் எனத்தெரிந்தவனாய்ப் பயந்தெழுந்து, காலதேவன் அரங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகிறான். இது நடக்கும்பொழுது ஆட்கள் உட்பட அரங்கத்தின்மீது 11 நாடகப் பாத்திரங்கள் இருக்கின்றன. ஒரு நாள் விக்டோரியா பப்ளிக் ஹால் மேல் மாடியில், இக்காட்சியை ஒத்திகை செய்தேன். எனது நண்பர்களாகிய வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், அ. வாமன்பாய், இன்னும் இரண்டொரு பெயர்களை ஹாலில் மத்தியில் உட்கார வைத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். முதலில் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் படிப்பதும், என் முகக்குறிப்பும் ஏற்றபடி இருக்கிறதா என்று அவர்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு, பிறகு நானும் அரங்கமேடையை விட்டு விலகி அவர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தச் சந்தர்ப்பத்தில் மற்ற ஒவ்வொரு ஆக்டரும் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லி, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆக்டராகக் கவனித்து சரியாயிருக்கிறதா என்று பார்த்து வந்தோம். இந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பதினொரு முறை நடிக்கச் சொல்லி, சீர்திருத்தினோம். பதினொரு முறை இவ்வாறு நடித்தவுடன் காலதேவனாக நடித்த எனது நண்பர் எம். சுந்தரேசன் என்பவர், “சம்பந்தம்! இனி என்னால் இதை நடிக்க முடியாது. எனக்கு இளைப்பாயிருக்கிறது. என்னை மன்னிக்க வேண்டும்!” என்று சொல்லி சோபாவின் மீது சாய்ந்து விட்டார். என்னுடைய ஆக்டர்கள் அக்காலம், நான் அவர்களை எவ்வளவு கஷ்டப்படுத்திய போதிலும், உடன்பட்டு, மனம் கோணாது, கற்று வந்ததைப்பற்றி எனக்குண்டான மன மகிழ்ச்சியை, இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுக்குக் கூறும் பொருட்டே இதை எழுதலானேன். தற்காலம் சில கண்டக்டர்கள், ஆக்டர்களை ஒத்திகைக்கு வரும்படி அழைத்தால், “எல்லாம் என் பாடம் எனக்கு நன்றாய் வரும், நான் மேடையின் மீது ஆடி விடுகிறேன். எனக்கு ஒத்திகை வேண்டாம்” என்று போய்விடுவதைப் பன்முறை பார்த்திருக்கிறேன். இதைப் படித்தாவது, என் இளைய நண்பர்கள் அவ்வாறு செய்யாம லிருக்க மாட்டார்களா என்று கோரினவனாயும் இதை இங்கு எழுதலானேன்.

இந்த ஒத்திகைகள் இவ்வாறு நடக்கும் பொழுதும், அதற்கு முன்பாகவும், இந்த “ஹாம்லெட்” நாடகத்தைப்