பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/324

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

309


பற்றிச் சென்னையிலுள்ள புஸ்தகசாலைகளில் என்னென்ன அச்சிட்ட புஸ்தகங்களிருந்தனவோ ஏறக்குறைய அவைகளையெல்லாம் படித்தேன்; முக்கியமாக நான் பூண மேற்கொண்ட அமலாதித்யன் பாத்திரத்தைப் பற்றி என்னென்ன ஆராய்ச்சிகள் (Criticism) கிடைத்தனவோ அவைகளை யெல்லாம் வாசித்தேன்; அதன்றியும் பிரபலமான ஆங்கில ஆக்டர்கள் இதை எப்படி எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் வாசித்து, ஒரு நோட் புஸ்தகத்தில் குறித்துக்கொண்டேன். இந்தப் பாத்திரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களும், ஆடினவர்களும் இரண்டு பிரிவாயிருக்கின்றனர். ஒரு பிரிவர், அமலாதித்யன் (ஹாம்லெட்) வாஸ்தவத்தில் பித்தம் பிடித்தவனானான் என்று மதிக்கின்றனர்; மற்றொரு பிரிவார், அவனுக்குப் பித்தம் பிடிக்கவில்லை , பித்தம் பிடித்தவன் போல் நடித்தான் என்று சில சமயங்களில் கூறுவார்கள். இதில் எது சரி, எது தவறு என்கிற விவாதத்தைப்பற்றி எழுதியிருப்பதை யெல்லாம் சேர்த்தால் ஒரு சிறு புஸ்தக சாலையாகும்! ஆராய்ச்சியுடன் நிற்க விரும்புவோர் பாடு சுலபம்; இதை நடிப்பவர்பாடு கஷ்டம். ஏனெனில், ஆராய்ச்சி செய்பவர்கள், ‘கோமுட்டி சாட்சியாக’ இரண்டு பக்கத்திலும் கொஞ்சம் நியாயமிருக்கின்றது என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடலாம்; மேடையின்பேரில் நடிப்பவன் ஏதாவது ஒரு பட்சத்தை ஒப்புக்கொண்டு, அதன்படி நடித்தாக வேண்டும். ஆதலால் எனக்குக் கிடைக்கக்கூடிய ஆராய்ச்சிகளையெல்லாம் படித்தான பிறகு நான் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டியதாயிற்று. நான் கடைசியில் வந்த தீர்மானத்திற்குக் காரணங்கள் எல்லாம் கூறப்புகில் அது ஒரு பெரிய வியாசம் ஆகும். ஆகவே அதை விட்டு என் தீர்மானத்தை மாத்திரம் இங் கெழுதுகிறேன். தன் தந்தையின் அகால மரணத் தினாலும் தன் தாய் விரைவில் மறு விவாகம் புரிந்ததாலும், மிகவும் மனங்கலங்கினவனான அமலாதித்யன், தனது தந்தையின் அருவத்தின் மூலமாக, அவர் தம்பியினால் கொலை செய்யப்பட்டதை அறிந்தவுடன், தலைமீது இடி விழுந்ததுபோல, மண்டை கலங்கினவனானான்; உடனே அவன் உயிர்த் தோழனான ஹரிஹரனுடன் பேசுங்காலையில் அவன் இன்னது சொல்கிறோம் இன்னது சொல்ல வில்லை என்பதையே சற்றும் அறியாதபடி, மூளை