பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

311


ஆக்டர்கள் நடித்த விதத்தில் நான் படிக்க விரும்பியதையெல்லாம் படித்தான பிறகு, ஒரு வாரம் இந்த நாடகத்தைப் பற்றி ஒன்றுமே எண்ணாது, மற்ற வேடிக்கை வினோதங்களில் என் மனத்தைச் செலுத்தி, நான் படித்த விவரங்களை யெல்லாம் மறக்க முயன்று, ஒருவாறு அப்படியே சாதித்தேன். பிறகு கடற்கரையோரம் தனியாகச் சென்று, அமலாதித்யன் பாத்திரம் இன்னின்ன காட்சிகளில் இப்படி இப்படி நடித்தால் சரியாகுமென்று தீர்மானித்தேன். இதன் பிறகுதான் எனது பாத்திரத்தை ஒத்திகை செய்ய ஆரம்பித்தேன்.

இவ்வாறு என் கவனத்தையெல்லாம் இந் நாடகத்தின் மீதே செலுத்தியபடியால் இவ்வருஷம் கடைசிவரையில் ஏறக்குறைய 8 மாதத்திற்கு வேறொரு தமிழ் நாடகமும் என்னால் கொடுக்க முடியாமற் போயிற்று. அதற்காக நிர்வாக சபையார் என்மீது குறை கூறியும் எழுதினர். என்ன நேர்ந்த போதிலும் என் தீர்மானத்தினின்றும் மாறமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாய் உட்கார்ந்தேன்.

மேற்சொன்னபடி ஒத்திகைகளெல்லாம் சரியாக நடத்தி இந் நாடகத்திற்கென்று வேண்டிய திரைகள், உடுப்புகள் எல்லாம் தயார் செய்தான பிறகு, 1906 ஜனவரி மாதத்தில் ஒரு தேதி குறித்தோம். இந்நாடகத்தை ஆடுவதற்கு இதற்குத் திடீரென்று ஓர் இடையூறு நேர்ந்து, தெய்வாதீனத்தால், என் தீர்மானத்தினின்றும் பிறழவேண்டி வந்தது. ஒரு நாள் சாயங்காலம் என் கடைசி ஒத்திகைகள் ஒன்றை நான் நடத்திக் கொண்டிருக்கும்பொழுது, எனது பால்ய நண்பர், என்னிடம் வந்து, “கொஞ்சம் ஒத்திகையை நிறுத்து; ஒரு முக்கியமான சமாச்சாரம் சொல்ல வந்திருக்கிறேன்!“ என்றார். அப்படியே நிறுத்தி, என்னவென்று விசாரிக்க அவர் பின்வருமாறு தெரிவித்தார்: “சர் சுப்பிரமணிய ஐயர் (ஹைகோர்ட்டு ஜட்ஜ்) என்னை அவசரமாகக் கூப்பிட்டனுப்பினார். என்னவென்று போய்க் கேட்டேன். அவர் அத்யட்சராயிருக்கும் லார்ட் ஆம்டில் என்டர்டெயின்மெண்ட் (Lord Ampthil Entertainment) கமிட்டியில் கவர்னருக்குக் கொடுக்கப் போகிற என்டர்டெயின்மெண்டில் சுகுண விலாச சபை சில காட்சிகள் நடிக்க வேண்டுமென்று கேட்டார். இந்தச்