பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

நாடக மேடை நினைவுகள்


சந்தர்ப்பத்தை நாம் கைவிடலாகாது. நமது சபைக்கு நல்ல பெயருண்டாகும்; நீ என்ன சொல்லுகிறாய்?” என்றார்.

அதற்கு நான் அதெல்லாம் முடியாது; இந்த அமலாதித்ய நாடகத்தைப் பிரித்துக் கொஞ்சம் காட்சிகளாக ஆட முடியாது. இந்த நாடகம் ஆடியாகிற வரையில் வேறெந்த நாடகமும் ஆடமாட்டேன் என்று தீர்மானித்துவிட்டேன். அந்தத் தீர்மானத்தினின்றும் மாற மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லிப் பார்த்தேன். எனது நண்பர், “முரட்டுத்தனம் பண்ணாதே! நான் சொல்வதைக் கேள்!” என்று எவ்வளவோ நியாயங்களெடுத்துக் கூறிப் பார்த்தார். என்னுடனிருந்த ஆக்டர்களும் வேண்டினர். எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும், “நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்” என்று மன்றாடினார்; கவர்னர் முன்னிலையில் நாடகம் நடத்துவதென்றால் எல்லோருக்கும் ஆசைதானே! அன்றியும் கவர்னர் முன்னிலையில் எங்கள் சபை அதுவரையில் ஆடியதில்லை. இவ்வாறு எல்லோரும் கேட்டும், நான் ஒரே பிடியாய், ‘மாட்டேன்!’ என்று கூறிவிட்டேன். “இந்த மக்கு ஒரு பிடிவாதம், மாறமாட்டான்!” என்று சொல்லி மனங் கசிந்து, ஒத்திகையிடத்தை விட்டு வெளியே போய்விட்டார். நான் என் ஒத்திகையை மறுபடி ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் கொஞ்சம் காலம் கழித்து மறுபடியும் வந்து சேர்ந்தார்! ஒரு காட்சி ஒத்திகை முடித்து சற்றுச் சிரம பரிஹாரம் கொள்ளும் சமயம் பார்த்து, “சம்பந்தம்! நான் சொல்வதைக் கேள்! குறுக்கே ஒன்றும் பேசாதே! நான் சொல்லியானதும், உனக்கு இஷ்டமில்லாவிட்டால், நான் உன்னைப் பலவந்தம் செய்யவில்லை” என்று மெல்ல ஆரம்பித்தார். இந்த முரட்டுக் குதிரையை அடக்கி ஆள அவர் ஒருவருக்குத்தான் வழி தெரியும். “என்ன, சீக்கிரம் சொல்!"என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டேன். “நான் பதில் கொண்டு வருவதாகச் சொல்லி வரவே, அவர்கள் எல்லாம் மீட்டிங் கலை யாதிருந்தார்கள்; நான் போய், ‘எங்கள் சபையில் ஒரு பிடிவாதக்கார மக்கு ஒருவன் இருக்கிறான்; அவன் முடியாதென்கிறான்; நான் இப்படிச் சொல்லவில்லை; ஆயினும் நான் சொன்னதன் தாத்பர்யம் அது!’ - என்று சொல்ல, ‘ஏன்? என்ன ஆட்சேபணை?’ என்று கேட்டார்,