பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/330

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

315


தகுந்ததாக அகப்படவில்லை. அன்றியும், சந்தோஷகரமான காலத்தில், சோகரசம் கூடாதென்று யோசித்து, கவர்னருக்குக் கொடுக்கும் கூட்டத்தில் அநேகம் ஆங்கிலர்கள் வருவார்கள். அவர்களுக்குத் தெரிந்த கதையாயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து ‘சகுந்தலை’ நாடகத்தில் முக்கியமான காட்சிகளை தோற்றக்காட்சிகளாக (Tableau Vivantes) காட்டுவோம் என்று தீர்மானித்தோம்.

அதன்படியே இவ்வருஷம் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதியில், சவுத் இந்தியன் அத்லெடிக் அசோசியேஷன் (South indian Athletic Association) மைதானத்தில் லார்ட் ஆம்டில் அவர்களுக்கு நடந்த உபசரணைக் கூட்டத்தில், மேற்சொன்ன காட்சிகளை நடத்தினோம். காட்சிகள் முடிந்த உடன் அங்கு நடந்த ஒரு வேடிக்கையைக் கூறுகிறேன். காட்சிகள் நடிக்கப்படும்பொழுது, கவர்னர் அவர்கள் ஸ்திரீ வேடம் பூண்ட ஆக்டர்கள் (அ. கிருஷ்ணசாமி ஐயரும், ரங்கவடிவேலுவும்) ஸ்திரீகளே என்று எண்ணி, இப்பெண்கள் நடிப்பது நன்றாயிருக்கிறதென மெச்சினாராம். அதன் பேரில் பக்கத்திலிருந்தவர்கள், இவர்கள் ஸ்திரீகள் அல்ல, ஆடவர்; பெண் வேடம் தரித்திருக்கின்றனர் என்று கூறவே, அவர் நகைத்து, ஆனால் அவர்களைத்தான் பார்க்க வேண்டுமென்று சொல்ல, காலஞ்சென்ற ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் அவர்கள், என்னிடம் வந்து “அப்பன், அந்தப் பெண்டுகளை கவர்னர் பார்க்க வேண்டுமாம். கொஞ்சம் அனுப்பு” என்று நடந்ததைக் கூறி நகைப்புடன் கேட்டார். பிறகு அவர்களுடைய வேஷத்துடன் அவர்களிரு வரையும் கவர்னர் அருகில் அழைத்துக்கொண்டு போய், அவர்களை இன்னாரெனத் தெரிவித்தார்.

இவ்வாறு நாங்கள் கவர்னர் எதிரில் நடித்ததன் பலன் என்னவென்றால், சுகுண விலாச சபையின் புகழ் பரவி, விரைவில் சென்னையிலுள்ள கனவான்களில் அநேகர் எங்கள் சபையைச் சேர்ந்ததேயாம்; இவ்வொரு வருஷத்தில் 153 அங்கத்தினர் சேர்ந்தனர். இது முதல் பல வருஷங்கள் வரையில், சென்னையில் கவர்னருக்கோ, ராஜப்பிரதி நிதிக்கோ (Viceroy) அல்லது யாராவது சென்னைக்கு வந்த பெரிய மனிதருக்கோ, உபசரணைக் கூட்டங்கள் நடந்தால் சுகுண விலாச சபையார் ஏதாவது காட்சிகள் நடத்த